மும்பை ரயில் இன்ஜின் நவீன காலத்திற்கு ஏற்றபடி புதுப்பிக்கப்பட்டு சோதனை ஓட்டம்
திருச்சி பொன்மலை பணிமனையில் மீட்டர் கேஜை விட குறைந்த அளவிலான தண்டவாளத்தில் ஓடும், ரயில் இன்ஜின் நவீன முறையில் வடிவமைத்து சாதனை.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொடர்ந்து பழைய இன்ஜின்கள் புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் தற்போது ரயில்வே அகலப்பாதை (பிராட்கேஜ்) ரயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில், மீட்டர் கேஜில் இயங்கும் நீலகிரி ரயில் இன்ஜின் இன்றும் புகழ்பெற்றதாக உள்ளது.
ஆனால் மீட்டர் கேஜைவிட மிகவும் குறைவான தற்போது மும்பையில் இருந்து பழமையான இன்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மும்பையில் உள்ள நேரல்மாத்ரன் என்ற பகுதியில் இருந்து 'பி' ரக இன்ஜின் கொண்டுவரப்பட்டது.
அமெரிக்காவில் தயாரிக்கப்ட்ட இந்த பி ரக பயணிகள் இன்ஜின் தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், பாரம்பரியமான பழைய முறைப்படி தயாரிக்கப்பட்ட இன்ஜின் வகைகளில் ஒன்றாக இது உள்ளது. இன்றும் இந்த இன்ஜின்கள் ஒரு சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக கடந்த 1914ல் தொடங்கி 1917ல் முடிக்கப்பட்ட இந்த நீராவி இன்ஜின் புதுப்பிக்கப்படுவதற்காக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு முதல் முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் குறித்து பொன்மலை பணிமனை ஊழியர்கள் கூறியது..
ஆங்கிலேயர்கள் காலத்தில் பயணிகள் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளை இழுத்து செல்வதற்கு ஏ, பி, ஏபி என்று பல ரகங்களில் இன்ஜின்கள் உற்பத்தி செய்யப்பட்டது. அதில் இந்த இன்ஜின் "பி"ரகத்தை சேர்ந்தது.
இதன் எடை மொத்தம் 11.43டன், பணியின்போது அதிகபடியாக பயன்படுத்த கூடிய எடை 15.50டன், மொத்தம் 5878மிமீ நீளமும், 2559மிமீ உயரமும், 1753மிமீ அகலமும், 660மிமீ சுற்றளவு உள்ள சக்கரங்களும், 335 குதிரை திறன் கொண்டதாகவும், 1818லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்றும் இதை ஒருசில இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு நீலகிரி ரயிலை எடுத்துக்கொண்டால் அது மீட்டர் கேஜில் இயங்கும்படி தான் உள்ளது. அதில் எக்ஸ் ரக இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இன்றும் மீட்டர் கேஜ்ஜை விட மிக சிறிய அளவிலான தண்டவாளங்களில் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதை டார்ஜிலிங்கில் நாம் பார்க்க முடியும். அப்படிப்பட்ட இன்ஜின்தான் தற்போது திருச்சி பொன்மலை பணிமனைக்கு புதுப்பிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
நவீன காலத்திற்கு ஏற்ப இன்ஜின் மாறி அமைப்பு
குறிப்பாக இது பழமையான இன்ஜின் என்பதால் இதற்கான உதிரிபாகங்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் நாம் அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கின்றோம். இந்த இன்ஜினை தற்போது "ஆயில் பயர் சிஸ்டம்" மூலம் இயங்கும்படி மாற்றி வடிவமைத்துள்ளோம்.
பொதுவாக இந்த இன்ஜின்கள் இயக்க தொடங்கும் போது டீசல் பயன்படுத்தி அதன் இயக்கத்தை தொடங்கி வைப்போம். அதன்பின் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் இழப்பு ஏற்படாமல் இருக்க குருடாயில் பயன்படுத்தி இன்ஜினை இயக்குவோம்.
அதன்படி தான் தற்போது நிலக்கரியை பயன்படுத்தி நீராவியால் இயங்கி கொண்டிருந்த இன்ஜின் தற்போது ஆயில் மூலம் இயங்கும்படி மாற்றியமைத்துள்ளோம்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முதல் முறையாக முயற்சி செய்துள்ளது. தற்போது இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்து, சோதனை ஓட்டமும் நடந்து முடிந்துள்ளது. மும்பையில் இருந்து ஆய்வு குழு வருகை தந்தால் விரைவில் இந்த புதிய இன்ஜின் தொடக்கவிழா நடைபெற்று மீண்டும் மும்பையில் தன்னுடைய சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர்.