புனித வெள்ளியன்று கர்த்தருக்குள் நித்திரையடைய முயற்சி - 40 நாட்களாக சாப்பிடாமல் இருந்த மூதாட்டி மற்றும் இளம்பெண்ணை மீட்ட போலீஸ்
மணப்பாறையில் பெற்ற தாயே பேயாக வந்துள்ளதாக கூறி பட்டதாரி பெண், தனது சித்தியுடன் நீண்ட நாட்களாக உணவருந்தாமல் இருந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மேல மஞ்சம்பட்டியில் வசித்து வருபவர் ஆரோக்கியம்மாள் (57). திருமணமாகாத ஆரோக்கியம்மாள், உயிரிழந்த தனது சகோதரி சவரியம்மாளின் 30 வயதுடைய இளம்பெண் மார்க்ரேட் அந்தோணியம்மாளை தன்னுடன் வளர்த்து வருகிறார். மார்க்ரேட் அந்தோணியம்மாள் எம்.எஸ்.சி. பி.எட் பட்டதாரி ஆசிரியை. இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து யாரும் கடந்த ஒரு மாதமாக வெளியே நடமாட்டம் இல்லை, அவர்கள் இருவரும் உணவருந்துவதும் இல்லை, துர்நாற்றம் ஏற்படுகிறது என அப்பகுதியில் புகார் எழுந்தது. புகாரினை தொடர்ந்து மணப்பாறை காவல்துறையினர் ஆரோக்கியம்மாளின் வீட்டிற்கு சென்றனர். கதவுகள் அனைத்தும், அறைகள் அனைத்தும் திறந்து கிடந்தது. வெளியே இருந்து காவல் துறையினர் அழைத்ததற்கு முணங்கிய குரலில் மெல்லிய சத்தம் மட்டுமே கேட்டது. யாரும் வெளியே வரவில்லை. அதனை தொடர்ந்து வீட்டில் நுழைந்த காவலர்கள், வீட்டில் எந்த பொருட்கள் இல்லாத கண்டு அதிர்ச்சையடைந்தனர். அறையின் ஒவ்வொரு மூலையிலும் மந்திரிக்கப்பட்டு மஞ்சள் பூசிய தேங்காய்கள் இரண்டு இரண்டாக வைக்கப்பட்டிருந்தன.
மேலும் அலமாரியிலும் மந்திரிக்கப்பட்ட தேங்காய்கள். அதனை தொடர்ந்து வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் எழுந்து கூட உட்கார முடியாத நிலையில் தரையில் படுத்து இருந்த ஆரோக்கியம்மாள், மார்க்ரேட் அந்தோணியம்மாளை கண்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்த போது, மார்க்ரேட் அந்தோணியம்மாள் தாய் சவரியம்மாளின் ஆவியான சைத்தான் வடிவில் வீட்டில் புகுந்துள்ளதாகவும், மேலும் அவரது தந்தை ஆரோக்கியசாமி தங்களுக்கு செய்வினை செய்துள்ளதாகவும், தங்கள் மீது உள்ள அசுத்த இரத்தம் போக்கி தூய இரத்தம் பெற புனித வெள்ளியில் கர்த்தரிடம் நித்தரையடைய இருப்பதாகவும், அதற்காக 40 நாட்கள் நோன்பு இருப்பதாகவும் கூறினார். அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்த ஆரோக்கியம்மாளின் தம்பி மரிய அருளும் அதை உறுதிப்படுத்தினார். பின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆரோக்கியம்மாள், மார்க்ரேட் அந்தோணியம்மாள் இருவரும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
மணப்பாறையில் வீட்டில் சைத்தான் புகுந்ததாகவும், பெற்ற தாயே பேயாக வந்து மிரட்டு வதாகவும் கூறி புனித வெள்ளியில் கர்த்தரிடம் நித்தரையடைய 40 நாள்கள் உணவருந்தாமல் ஆபத்தான நிலையில் நோன்பு இருந்த மூதாட்டி மற்றும் முதுநிலை பட்டதாரியான இளம்பெண் ஆகியோரை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மணப்பாறையில் இதேபோல் கடந்த 2021 அக்டோபர் மாதம், கர்த்தர் உயிர்பிப்பார் என மூன்று நாள்களாக தனது உயிரிழந்த தாயை வைத்துக்கொண்டு பிராத்தனையில் ஈடுபட்ட சகோதரிகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது