(Source: ECI/ABP News/ABP Majha)
56 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மணப்பாறை நகராட்சியை கைப்பற்றிய அதிமுக
மணப்பாறை நகராட்சியில் 56 ஆண்டுகால வரலாற்றில் அதாவது 1966-க்கு பிறகு அ.தி.மு.க. முதல் முறையாக நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் 11 பேரும், அ.தி.மு.க. சார்பில் 11 பேரும், சுயேச்சைகள் 5 பேரும் வெற்றி பெற்று இருந்தனர். தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. சமபலத்துடன் இருந்ததால் யார் வசம் மணப்பாறை நகராட்சி செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்தனர். இதனால் தி.மு.க. கூட்டணி 11 பேர் மற்றும் சுயேச்சைகள் 5 பேரின் ஆதரவு என மொத்தம் 16 பேரின்ஆதரவோடு தி.மு.க. நகராட்சியை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. இதையடுத்து நேற்று காலை மறைமுக தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் கட்சியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த 25-வது வார்டு கவுன்சிலர் கீதா மைக்கேல்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதே போல் அ.தி.மு.க. சார்பில் 18-வது வார்டு கவுன்சிலர் சுதா பாஸ்கரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் இருவர் மட்டுமே செய்திருந்த நிலையில் அதன் பின்னர் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சுதா பாஸ்கரன் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் கீதா மைக்கேல்ராஜ் 12வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். பின்னர் சுதா பாஸ்கரனுக்கு , நகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான சியாமளா வெற்றிக்கான சான்றிதழை வழங்கினார். பின்னர் துணைத் தலைவர் தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக நகர்மன்ற தலைவர் இருக்கையில் சுதாபாஸ்கரன் அமர்ந்து பணியை தொடங்கினார்.
இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. 3 மணி வரை வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் இருந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் 12-வது வார்டு கவுன்சிலர் எத்திராஜ் மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 11 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 11 பேர், சுயேச்சை கவுன்சிலர்கள் 5 பேர் என மொத்தம் 16 பேர் கலந்து கொள்ளவில்லை. இதனால் வேட்பு மனு தாக்கல் நேரம் முடிந்து பிறகு தேர்தலை நடத்துவதற்குரிய போதிய நகர்மன்ற கவுன்சிலர்கள் இல்லை என்று கூறி தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரியும், நகராட்சி ஆணையருமான சியாமளா அறிவித்தார்.
உடனே அங்கிருந்த அ.தி.மு.க. நகர்மன்ற தலைவர் சுதா பாஸ்கரன் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்தல் விதிகளின் படி 3-ல் ஒரு பகுதி கவுன்சிலர்கள் இருந்தால் தேர்தலை நடத்த முடியும். அதன்படி 9 பேர் இருந்தால் போதுமானது 11 பேர் உள்ளனர் ஏன் தேர்தலை ஒத்தி வைக்கின்றீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போதிய கவுன்சிலர்கள் இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரி புறப்பட்டுச் சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் மணப்பாறை நகராட்சி அலுவலகம் எதிரே மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வெற்றியை அறிவிக்க வேண்டும் என்று கூறி மறியலை தொடர்ந்தனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி எதுவாக இருந்தாலும் சட்டப்படி தீர்வு காண வேண்டும், சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்வோம் என்று கூறியதை அடுத்து மறியலை கைவிட்டனர். பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அனுப்பி வைத்தனர். குறிப்பாக மணப்பாறை நகராட்சியில் 56 ஆண்டுகால வரலாற்றில் அதாவது 1966 ஆம் ஆண்டுக்கு பிறகு அ.தி.மு.க. முதல் முறையாக நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.