காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் மாஸ்க் போடுங்கள் - அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தல்
திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை அதிகமாகி உள்ளநிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதேசமயம் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு தென்படுகிறது. இந்த சூழல் மாற்றத்தால் பெரும்பாலானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கடந்த சில வாரங்களாக காய்ச்சல், இருமல், சளி போன்ற தொந்தரவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் இந்த சீதோஷண நிலை மாற்றத்தை மனிதர்களின் உடல் ஏற்றுக்கொள்ளாமல், ஒருசில பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த உடல் உபாதை என்பது தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும், காணப்பட்டாலும், ஒருசில வறட்சி மிகுந்த பகுதிகளிலும் இதேநிலை நீடிக்கிறது. அதற்கு காரணம் வழக்கமான பனிபொழிவைவிட சற்று கூடுதலாக பொழியும் பனிபொழிவு விடியற்காலையை கடந்தும், காலை 10 மணி வரையும், மாலை 5 மணிக்கெல்லாம் சூரியன் மறைய ஆரம்பிக்கும் தருவாயில் பனிபொழிவின் தாக்கம் அதிகம் உள்ளது. அதேபோல் பெய்துவரும் மழையால் ஏற்படும் பாதிப்பு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகளையும், கொசுக்களின் பெருக்கம் போன்றவை டெங்கு காய்ச்சலையும் அதிகப்படுத்தி வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்றைய புள்ளி விவரப்படி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அவர்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சாதாரண காய்ச்சலால் 250க்கும் அதிகமானவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் மட்டும் சுமார் 45 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் நாள் ஒன்றுக்கு காய்ச்சல், இருமல், சளி என்று புற நோயாளிகளாக சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இவைதவிர மருத்துவமனைக்கு வராமல் வீட்டிலேயே கை வைத்தியம், மருந்தகங்களில் நேரடியாக மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நபர்கள் என்று கணக்கில் எடுத்துகொள்ள முடியாத அளவிற்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.
இருப்பினும் இந்த காய்ச்சலில் இருந்து விடுபடுவதற்கு செய்ய வேண்டியவைகள் குறித்து திருச்சி அரசு மருத்துவர்கள் கூறியது.. இன்றைய நிலையில் இரண்டு விதமான காய்ச்சல்கள் உள்ளது. ஒன்று டெங்கு காய்ச்சல், இது பகல் நேரங்களில் கடிக்கும் டெங்கு கொசுவால் ஏற்படும் வைரஸ் தாக்கத்தால் வரும் காய்ச்சல், இதனை தடுக்க நம்மை சுற்றி தேங்கி நல்ல தண்ணீர் தேங்கி இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். கை, கால்கள் மூடியிருக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும்.
மேலும், கொசு கடிக்காமல் இருப்பதற்கான சூழலை ஏற்படுத்திட வேண்டும். மற்றொரு காய்ச்சல் “ப்ளு’’ இது ஒவ்வொரு வருடமும் மழை மற்றும் பனி காலங்களில் வரக்கூடியது. இதுவும் வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பு தான். எனவே காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் முதலில் மாஸ்க் அணிந்து கொள்வது கட்டாயம். நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லலை என்றாலும், மாஸ்க் அணிந்து கொள்வது, வௌியில் இருந்து வீட்டிற்குள் நுழையும்போது கை, கால்களை கட்டாயம் கழுவி விட்டு உள்ளே செல்ல வேண்டும். அதேபோல் பொதுமக்கள் வீட்டில் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
அதேபோல் பனிபொழிவு அதிகம் இருக்கும் சமயங்களில் தலை, காது மற்றும் மூக்கு பகுதிகளை துணிகளை கொண்டு பாதுகாத்திட வேண்டும். காய்ச்சல் மற்றும் இருமல் அதிகம் இருக்கும்பட்சத்தில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ப்ளு பாதிப்பால் ஏற்படும் பிரச்னைகளுக்கு அனைத்துவிதமான மருந்து மாத்திரைகளும் நம்மிடம் உள்ளது. வௌிநாடுகளை போல ஒவ்வொரு வருடமும் ப்ளு காய்ச்சல் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் வசதிகள் தற்போது நம்முடைய நாட்டிலும் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தடுப்பூசிகள் உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம். காய்ச்சல், இருமல், சளி, சுவாசிப்பதில் பிரச்சனை, உடல்வலி போன்ற எந்த பிரச்சனையும் தொடர்ந்து இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம் என்று கூறினார்கள்.