Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே கருடன் வட்டமிட்டது. இதைப் பார்த்த தொண்டர்கள் ஆனந்தக் கண்ணீரில் விம்மினர்.
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவிடம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் நினைவிடத்துக்கு மேலே இன்று கருடன் வட்டமிட்டது தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிலர் கண்ணீர் வழிய கருடனை வணங்கினர்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் கேப்டன் என்று எல்லோராலும் அனைவரும் அழைக்கப்படுபவரான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முதலாம் ஆண்டு நினைவு நாள்
விஜயகாந்த் மறைவை முன்னிட்டு ஏராளமான தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொண்டர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். இந்த நிலையில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஏற்கெனவே விஜயகாந்தின் நினைவு நாள் குரு பூஜையாக அனுசரிக்கப்படும் என்று தேமுதிக அறிவித்திருந்தது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் கோயில் போன்று மாற்றப்பட்டுள்ளது. பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவித்து, அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனந்தக் கண்ணீரில் விம்மிய தொண்டர்கள்
இதற்கிடையே விஜயகாந்தின் நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதி தொண்டர்கள் காலை முதலே நினைவிடத்தில் குவிந்தனர். மேலும் பலர் மாலை போட்டு, விரதம் இருந்து நினைவிடத்துக்கு வந்தனர். இந்த நிலையில், விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே கருடன் வட்டமிட்டது. இதைப் பார்த்த தொண்டர்கள் ஆனந்தக் கண்ணீரில் விம்மினர்.
கருடன் பறந்தால் என்ன அர்த்தம்?
இந்து மதப்படி நல்ல உயிர்கள் இறந்தால், புண்ணிய ஆத்மாக்கள் கைலாயத்துக்கோ அல்லது வைகுண்டத்துக்கோ செல்வதாக ஐதீகம். அந்த வகையில் பெருமாளின் அவதாரமான கருடன் பறந்தால். பெருமாளே நேரில் வந்து வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்வதாக அர்த்தம் என்கின்றனர் ஆன்மிகவாதிகள்.
ஏற்கெனவே விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தின்போது வானில் கருடன் சுற்றி வட்டமிட்டது நினைவுகூரத் தக்கது.