திருச்சியில் நாளை 1,084 கோடி மதிப்பீடில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் முதல்வர்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் 1,084 கோடியே 80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார்..
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தின் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு இருந்து சாலை மார்கமாக தஞ்சாவூர் செல்கிறார். இரவு தனியார் விடுதியில் தங்குகிறார். இதனை தொடர்ந்து நாளை காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன் பிறகு சாலை மார்கமாக வரும் முதல்வர் திருச்சி சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்குகிறார். பின்பு மாலை விழா நடைபெறும் கேர் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று திருச்சி மாவட்டத்தின் பல ஆண்டுகால முக்கிய கனவு திட்டமான பஞ்சப்பூரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு முதற்கட்டமாக 48 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க 140 கோடி, 25 ஏக்கர் பரப்பளவில் கனரக சரக்கு முனையம் அமைக்க 76 கோடி, 152 ஏக்கர் பரப்பளவில் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளுக்கு 75 கோடி, 100 ஏக்கர் பரப்பளவில் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் அமைப்பதற்கு 59 கோடி என 350 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுதல் உள்பட மொத்தம் 604 கோடியே 10 லட்சம் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.