திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வை 1,897 பேர் எழுதவில்லை - மாவட்ட நிர்வாகம் தகவல்
திருச்சி மாவட்டத்தில் 30 ஆயிரத்து 865 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதினார். 1,897 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வானது ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 133 தேர்வு மையங்களில் 260 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 748 மாணவர்கள், 17 ஆயிரத்து 14 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 762 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளை கண்காணிக்க 133 முதன்மை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வறை கண்காணிப்பு ஆசிரியர்கள், பறக்கும் படையினர் என அலுவலர்கள் பலர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேரில் ஆய்வு செய்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வை ஆய்வு செய்தார்.
மேலும் அவர் இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் படித்தவர் என்பதால் அந்த பள்ளியின் சீருடையிலே (காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டை) சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தைரியமாக தேர்வு எழுதுங்கள் என்று அவர் வாழ்த்துக்களை கூறி தேர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும், தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவர்கள் 14,517 பேரும் மாணவிகள் 16,348 பேரும் என 30 ஆயிரத்து 865 பேர் தேர்வு எழுதினார்கள்.1,231 மாணவர்களும், 666 மாணவிகளும் என மொத்தம் 1,897 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு எழுத இயலாத பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்காக அவர்கள் சொல்வதை எழுதுபவர்கள் 275 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது.. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த இதைத்தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தனிமைப்படுத்தபட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது காய்ச்சல் நோயால் தினமும் 15 லிருந்து 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி மாவட்டத்தில் தொற்று நோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் . முக கவசங்கள், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.