(Source: ECI/ABP News/ABP Majha)
இரு கைகளை கூப்பி கும்பிட்டு வேண்டுகோள் வைத்த நடிகர் பிரபு - பதில் கூறாமல் நகர்ந்த அமைச்சர் நேரு
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டமாக `எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சி புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நடிகர் பிரபு கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து, புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும் சுமார் 12 ஆயிரம் சதுரஅடி அரங்கத்தில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளம் வயது முதல் தற்போது வரை பல்வேறு வகையான போராட்டங்கள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்ற புகைப்படங்கள், முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்த அரசு நிகழ்ச்சிகள், தேசிய தலைவர்களுடனான சந்திப்பு, தி.மு.க. அரசின் சாதனைகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு கூறியது.. நான் சிறுவயது முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு பழகி வருகிறேன். அவருடைய கடின உழைப்பு என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். அவர் படிப்படியாக உயர்ந்து இன்று முதலமைச்சர் என்ற இடத்துக்கு வந்துள்ளார். அவர் மக்களுக்காக செய்த பணி மற்றும் தியாகங்களுக்கு இந்த கண்காட்சியே சான்றாக உள்ளது. திருச்சி என்பது நம்ம ஊரு என எங்க அப்பா கூறுவார்.
மேலும் அந்த காலத்தில் திருச்சியில் உள்ள எடத்தெரு, கண்டித்தெரு என பல இடங்களிலும் நான் மாட்டு வண்டியில் சுற்றி திரிந்துள்ளேன். இங்கு எங்களுக்கு நிறைய உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் இன்று தமிழக மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார். அதேபோல் இனி வரக்கூடிய காலங்களிலும் அவர் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும்.
சிவாஜி சிலையை திறக்க வேண்டுகோள்:
பாலக்கரை ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சிலை திறக்கப்படாமல் இருப்பது குறித்து பிரபுவிடம் கேட்டபோது, "அந்த சிலையை திறப்பதில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தது. அவை எல்லாவற்றையும் சரி செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் சிலையை திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். இதையே அமைச்சர்களிடம் நான் கோரிக்கையாகவும் வைக்கிறேன்" என்றார். ஆனால் இரு கைகளை கூப்பி கும்பிட்டு வேண்டுகோள் வைத்த நடிகர் பிரபு- பதில் கூறாமல் நகர்ந்த அமைச்சர் நேரு என்பது குறிப்பிடதக்கது.
மேலும் விழாவில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், ஸ்டாலின்குமார், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, கண்காட்சி ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான ஜோ மல்லூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.