காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய இளைஞர்: கழுத்தை அறுத்து கொன்ற மர்ம கும்பல்: திருச்சியில் பரபரப்பு
திருச்சி அருகே ஐ.டி.ஐ.மாணவரை கழுத்தறுத்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் மேலத்தெருவை சேர்ந்தவர் பொன்னன். இவருடைய மகன் கோகுல் (வயது 17). இவர் திருச்சி அரசு ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வழக்கம்போல் ஐ.டி.ஐ.க்கு சென்று விட்டு வீடு திரும்பினார். பின்னர், இரவில் கோகுல் மற்றும் அவரது அண்ணன் ஆகாஷ், பாட்டி தங்கம்மாள் மற்றும் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் வீட்டில் புழுக்கமாக இருந்ததால் கதவுகளை திறந்து வைத்து அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் தூங்கிக்கொண்டிருந்த கோகுலின் கழுத்தை கத்தியால் அறுத்தனர். இதனால் வேதனையில் துடித்த அவர், மர்ம ஆசாமிகளிடம் இருந்து தப்பி செல்வதற்காக வெளியே ஓடிவந்துள்ளார். கழுத்தில் காயம் அதிகமாக இருந்ததால் அவர் வாசலில் விழுந்தார். பின்னர் கோகுல் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனிடையே சத்தம் கேட்டு தூங்கி எழுந்த ஆகாஷ் ஓடிவந்தார். வீட்டு வாசலில் கோகுல் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதற்கிடையில் மர்ம ஆசாமிகள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மேலும், இது குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கோகுல் அதே பகுதியை சேர்ந்த தேசிங்கு ராஜா என்பவரை அரிவாளால் வெட்டியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் சமீபத்தில் தான் வெளியே வந்துள்ளார். இது தொடர்பாக தேசிங்குராஜா தரப்பினருக்கும், கோகுலுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. மேலும் கோகுல் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகளும் உள்ளது.
இதுக்குறித்து காவல்துறை அதிகாரிகள் முன்விரோதத்தில் கோகுல் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலையில் கோகுலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினர் அவரது உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது, ஜீயபுரம் கடைவீதியில் ஊர்வலம் சென்றபோது, ஊர்வலத்தில் சென்றவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.