(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சியில் பொதுப்பணிதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தமிழ்நாடு முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளிலும் அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் (Govt. Sand Depot) முறைகேடு நடந்ததாக கடந்த 12.09.2023 அன்று அமலாக்கத் துறையினர் சோதனையிட்டதால் அனைத்து அரசு மணல் விற்பனை கிடங்குகளும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மணல் லோடு எடுப்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட 55,000க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு மணல் விற்பனை நிலையங்கள் லாரி இயக்கப்படாததால், இலட்சத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மணல் குவாரி இயங்காததால் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாட்டு ஏற்பட்டு செயற்கை மணல் (M.Sand) பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செயற்கை மணல் (M.Sand) உற்பத்தியாளர்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.750/- விலை உயர்த்தியும், தரமற்ற கற்களை அரைத்தும் கிரசர் பவுடர்களை (Quarry Dust) கலந்தும் விற்பனை செய்வதால் அதை வாங்கி கட்டும் கட்டிடங்கள் உறுதித்தன்மையின்றி எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், கட்டுமானப்பணிகளுக்கு தங்கு தடையின்றி குறைந்த விலையில் மணல் கிடைத்திடவும் அரசு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் விற்பனை கிடங்குகளையும் இயக்கி லாரிகளுக்கு மணல் லோடு வழங்க வேண்டி தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு கடந்த 06.10.2023 அன்று திருச்சியில் சம்மேளனத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
அதன்பிறகு பொதுப்பணித்துறையினர் கடந்த 05.10.2023 அன்று பெயரளவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவிலடி, கோவிந்தநாட்டு சேரி, வடுககுடி, நாமக்கல் மாவட்டத்தில் குமரிபாளையம், கரூர் மாவட்டத்தில் நன்னியூர்புதூர், கணபதிபாளையம், திருவள்ளூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர், திருச்சி மாவட்டத்தில் உத்தமர்சீலி, வெள்ளிதிருமுத்தம், புதுக்கோட்டை மாவட்டம் அமான்ஜி ஆகிய 10 அரசு மணல் விற்பனை கிடங்குகளை இயக்கி ஒவ்வொரு அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் தினசரி குறைந்த எண்ணிக்கையிலான 30 முதல் 40 லாரிகளுக்கு மட்டுமே லோடுகள் வழங்கி வருகிறார்கள். அதன்பிறகு கரூர் மாவட்டத்தில் இயங்கி வந்த நன்னியூர்புதூர், கணபதிபாளையம் ஆகிய அரசு மணல் விற்பனை கிடங்குகளில் இருப்பில் இருந்த மணல் முற்றிலும் தீர்ந்து விட்டதால் கடந்த 19.10.2023 முதல் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.
மேலும், வேலூர் மாவட்டம், கந்தனேரி, அரியலூர் மாவட்டம் தளவாய்வடக்கு, இராமநாதபுரம் மாவட்டத்தில் மங்களம், ஒரியூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் குன்னம், பாலூறான்படுகை ஆகிய அரசு மணல் விற்பனை கிடங்குகளில் அதிக அளவில் மணல் இருப்பு இருந்தும் பாதை பிரச்சனை, ஊர் பிரச்சனை என்று இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளார்கள். மேற்படி குவாரிகளில் லோடு எடுப்பதற்கு இணையதள (Online Booking) பதிவு செய்த லாரிகள் மணல் எடுக்க ஏறத்தாழ இரண்டு மாதங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.மேற்படி குவாரிகளில் பாதை மற்றும் ஊர் பிரச்சனைகளை சரிசெய்து உடனடியாக இயக்கப்பட வேண்டும், அல்லது மேற்படி அரசு மணல் லாரிகளை இயங்குகின்ற ஏதாவது ஒரு அரசு மணல் விற்பனை கிடங்குகளில் மணல் எடுக்க (Move Order) மாற்றிக்கொடுக்க வேண்டுமென்று மனு கொடுத்தும் இதுவரை யாதொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் அதிக எண்ணிக்கையிலான புதிய அரசு மணல் குவாரிகளை திறந்து இயக்கிட வேண்டும், இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் தட்டுப்பாடின்றி தொடர்ந்து வழங்கிட ஆற்றிலிருந்து மணல் விற்பனை கிடங்கிற்கு மணல் எடுத்து வந்து இருப்பு வைக்க சிறப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் செல்ல.ராசாமணி தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் திருச்சியில் உள்ள மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் ராசாமணி பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை செய்த பிறகு அந்த குவாரிகளை இயக்க அரசு ஆர்வம் காட்டவில்லை மாறாக தனியார் எம்.சாண்ட் குவாரிகளை இயக்க தான் ஆர்வம் காட்டுகிறது அது தவறு. எனவே அமலாக்கத்துறை சோதனையால் செயல்படாமல் உள்ள குவாரிகளை மீண்டும் இயக்க வேண்டும், புதிய குவாரிகளையுன் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். மணல் குவாரிகளில் 6 சக்கரம் மற்றும் 10 சக்கரம் கொண்ட லாரிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் தலைமை பொறியாளர் அலுவகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காவல் துறை அதற்கு அனுமதி வழங்காததால் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள்,அலுவலகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் நுழைவு வாயிலில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.