அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தமிழகம் முதல் இடம்
சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளில் கரூர் மாவட்டம் குளித்தலை மருத்துவமனை சிறிய மருத்துவமனைகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள் தொடர்பான நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் உயர் சிறப்பு, துணை மருத்தவ சேவைகளில் சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையில் பின்தங்கி உள்ளது. இந்தியாவில் பெருநகரங்களில் தவிர்த்து, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதில் மாவட்ட அரசு மருத்துவமனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அனைத்து மருத்துவ வசதிகளுக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைகளைதான் நம்பி உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட அரசு மருத்துவமனைகள் தொடர்பான அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.இந்தியா முழுவதும் உள்ள 707 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தொடர்பான தகவல் இந்த ஆய்வுக்கு எடுத்துக கொள்ளப்பட்டுள்ளது. இந்திய பொது சுகாதார தரநிலைகளின் அடிப்படையில் படுக்கை வசதி, மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை, மருத்துவ வசதிகள், சிசேரியன் எண்ணிக்கை, புற நோயாளிகள் பிரிவு, ரத்த வங்கி, ஆகிவயற்றில் மருத்துவனைகளின் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மருத்துவமனைகள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 200 படுக்கைகளுக்கு குறைவாக உள்ளவைகள் சிறிய மருத்துவமனைகள் என்றும், 201 முதல் 300 வரை படுக்கைகள் வரை உள்ளவைகள் நடுத்தர மருத்துவமனைகள் என்றும், 300க்கு மேல் படுக்கைகள் உள்ளவைகள் பெரிய மருத்துவமனைகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 707 மருத்துவமனைகளில் சிறிய மருத்துவமனைகளின் எண்ணிக்கை 438. நடுத்தர மருத்துவமனைகளின் எண்ணிக்கை 149. பெரிய மருத்துவமனைகளின் எண்ணிக்கை 120. தேசிய அளவில் மாவட்ட மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சம் மக்களுக்கு 24 என்ற எண்ணிக்கையில் உள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் மக்களுக்கு 22 என்ற படுக்கை வசதி உள்ளது. படுக்கை எண்ணிக்கை அடிப்படையில் சிறந்த மருத்துமனைகளின் பட்டியில் புதுவை மாகே மற்றும் ஏனாம் மருத்துமனைகள் சிறிய பிரிவிலும், காரைக்கால் மருத்துவமனை பெரிய பிரிவிலும் இடம் பிடித்துள்ளது. இந்திய பொது சுகாதார தரநிலை படி மருத்துவர், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களின் உள்ள மருத்துவமனைகளின் பட்டியலிலும் தமிழகத்தில் உள்ள ஒரு மருத்துவமனை கூட இடம் பெறவில்லை.
புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ரத்த வங்கி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட 14 துணை சேவைகளை சிறப்பாக அளிக்கும் 89 மாவட்ட மருத்துவமனைகளில் தமிழகத்தைச் சேர்ந்த 18 மருத்துவனைகள் இடம் பெற்றுள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் சிறிய மருத்துவமனைகளின் பட்டியலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையும், பெரிய மருத்துவமனையில் திண்டுக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும் இடம் பெற்றுள்ளது. குழந்தைகள் சிறப்பு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கண்,மூக்கு, காது, தொண்டை உள்ளிட்ட 14 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் 101 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 17 மருத்துவமனைகள் தமிழகத்தில் உள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளில் கரூர் மாவட்டம் குளித்தலை மருத்துவமனை சிறிய மருத்துவமனைகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்த படியாக அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் 65 சதவீத பிரசவங்கள் சிசேரியன் முறையில் நடைபெறுகிறது. அதிகம் சிசேரியன் நடைபெறும் பெரிய மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பட்டியலில் நாகை மருத்துவமனை இடம் பெற்றுள்ளது.தமிழகத்தில் 22 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் புறநோயாளிக் சிகிச்சை வழங்கப்படுகிறது. புறநோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் நடுத்தர பிரிவில் வாலாஜபேட்டை அரசு மருத்துவமனை மற்றும் பெரிய குளம் அரசு மருத்துமனைகள் இடம் பெற்றுள்ளது. ரத்த வங்கி ரிப்ளேஸ்மென்ட் விகிதத்தில் சிறிய மருத்துவமனைகளில் உசிலம்பட்டி, பத்மநாபுரம் அரசு மருத்துவமனைகளும், நடுத்தர மருத்துவமனைகளில் மேட்டூர் அணை மருத்துவமனையும் இடம் பெற்றுள்ளது.
ஆய்வு அறிக்கை கூறுவது என்ன?
2018 டிசம்பர் தொடங்கி 2019 இதுவரை வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள 707 மருத்துவமனைகள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் தமிழகத்தில் உள்ள 32 மருத்துவனைகள் எடுத்து கொள்ளப்பட்டது.
6 மருத்துவனைகளில் தான் ஐபிஎச்எஸ் விதிகளின் படி மருத்துவர்கள் உள்ளனர்
14 மருத்துவமனைகளில்தான் ஐபிஎச்எஸ் விதிகளின் படி மருத்துவ பணியாளர்கள் உள்ளனர்
ஒரு மருத்துவமனையில் கூட ஐபிஎச்எஸ் விதிகளின் செவிலியர்கள் இல்லை
தமிழகத்தில் சிறப்பாக மாவட்ட மருத்துவமனைகள்...
படுக்கை எண்ணிக்கை -பெரம்பலூர் மருத்துவமனை
மருத்துவர்கள் எண்ணிக்கை- கீழ்பாக்கம் மருத்துவமனை
மருத்துவ சேவைகள்- கீழ்பாக்கம் மருத்துவமனை
மருத்துவ சோதனைகள்- கீழ்பாக்கம் மருத்துவமனை
மற்ற மருத்துவ சேவைகள்- திண்டுக்கல் மருத்துவமனை
சிசேரியன் விகிதம்- பத்மாநாபபுரம் மருத்துமனை
அறுவை சிகிச்சை- தென்காசி மருத்துவமனை
புற நோயாளிகள் பிரிவு- வாலாஜாபேட்டை மருத்துவமனை
ரத்த வங்கி ரிபிலேஸ்மெண்டட் விகிதம்- திருவள்ளூர் மருத்துவமனை
படுக்கைகள் நிரம்பும் விகிதம் -கிருஷ்ணகிரி மருத்துவமனை