வரும் 30 ஆம் தேதி திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு முதல்வர் அடிக்கல்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் குளிப்பதற்கும், ஒய்வு எடுப்பதற்கு மட்டுமே அறைகள் வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை.
திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் முக்கியமானதாகும். ஏன் என்றால் வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், கல்லூரிகள், போன்ற பல சுற்றுலா தலங்களுக்கு மையமாக இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆகையால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் 95 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு சத்திரம் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகள் முடிந்த பணிகள் என அனைத்து விபரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இம்மாதம் வருகிற 30 ஆம் தேதி தமிழக முதல்வர் திருச்சியில் முடிவுற்ற பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய நலத் திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அப்போது திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 400 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு, முடிவுற்ற திருச்சி சத்திரம் புதிய நிலையத்தை திறக்க வைக்க உள்ளார் என தெரிவித்தார்.
மேலும் சத்திரம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பயன்பாட்டிற்காக ஏற்கனவே கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான உடை மாற்றும் அறை, குளிப்பதற்கான இடங்களை மூன்றாவது தளத்தில் கட்டித்தரப்படும். ஆனால், அவற்றை இலவசமாக அல்ல அதற்குரிய பணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். திருச்சி நடைபெறும் பல்வேறு கட்ட பணிகளில் வடநாட்டை சேர்ந்த சிறுவர்கள் பயன்படுத்தி வருவதாக எழுப்பிய கேள்விக்கு? தமிழகத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என கூறி கட்டுமான தொழில் செய்பவர்கள் வட மாநில ஆட்களை வைத்து பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் அந்த பணியில் சிறுவர்கள் இருந்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அதற்கு நடவடிக்கையை மேற்கொள்வார் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து திருச்சி மாநகரில் வருகிற 30 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 400 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்க உள்ளார்.
திருச்சியில் ரீடைல் மார்க்கெட் தற்போது கோயம்பேடு மார்கெட்டை போல பெரிய அளவில் செயல்படுத்த உள்ளோம். பெரிய அளவில் பேருந்து நிலையம் வர இருக்கிறது. இதற்காக எலிவேட்டர் ஹைவே சாலையை அண்ணாசிலையில் இருந்து குடமுருட்டி செல்வதற்கு பதிலாக நான் அண்ணாசிலையில் இருந்து நேராக மத்திய பேருந்து நிலையம் செல்வது மிகவும் வசதியாக இருக்கும் என நான் கேட்டுள்ளேன் என்றார்.மேலும் கள்ளிக்குடி மார்க்கெட் செல்வதற்கு எந்த வியாபாரி விரும்பவில்லை. ஏன் என்றால் அறைகள் அனைத்தும் சிறிய அளவில் கட்டப்பட்டுள்ளதால் வியபாரிகள் சிரமபடுகிறார்கள்.
மேலும் இது குறித்து வல்லுநர்கள் யோசனை செய்து மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். அனைத்து நடத்துநர்களும், ஓட்டுனர்களும் பயன்படுத்தும் வகையில் அறையை குளிப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், முன்னாள் மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.