வீட்டில் தூங்கி கொண்டிருந்த CRPF வீரரின் மனைவியை தாக்கி தாலி சங்கிலி பறிப்பு - பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு வீடியோ மூலம் CRPF வீரர் கோரிக்கை
’’எங்கள் வீட்டிற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இங்கு ராணுவத்தில் எப்படி நாங்கள் பணியாற்ற முடியும்’’
திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பேரூர் கிராமத்தில் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவர் காஷ்மீர் பகுதி சி.ஆர்.பி.எப். படை பிரிவில் பணி புரிந்து வருகிறார். மேலும் இவரது மனைவி கலைவாணி (29). இவர் தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் இரவில் மின் தடை ஏற்பட்டது. மின்சாரம் இல்லாததால் காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து கலைவாணி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
ராணுவ வீரரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், வீரர்கள் எப்படி எல்லைப்பகுதியில் பணியாற்ற முடியும். - ராணுவ வீரர் நீலமேகம்..@abpnadu @imanojprabakar pic.twitter.com/vug0lwpRD3
— Dheepan MR (@mrdheepan) April 28, 2022
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அங்கு வந்தார். திடீரென்று காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்த அவர் சுற்றுமுற்றும் நோட்டமிட்டார். பின்னர் யாரும் இல்லாததை அறிந்த அந்த ஆசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கலைவாணி அருகில் சென்றார். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தங்க நகை, தாலிக்கொடியை பறித்தார். அப்போது தூக்கம் கலைந்த கலைவாணி கொள்ளையனிடம் இருந்து நகையை காப்பாற்ற போராடினார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இதில் கலைவாணியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் கொள்ளையன் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
காயம் அடைந்த கலைவாணி அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதன் பின்னரே வந்தனர். இதையடுத்து அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து தா. பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் ஜெம்புநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து ராணுவ வீரரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இராணுவ வீரர் நீலமேகம் மிகவும் மனவேதனையில் ஒரு வீடியோவை வெளியீட்டுள்ளார். அதில் நான மேற்கூறிய முகவரியில் வசித்து வருகிறார். தற்போது நான் காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன், இந்நிலையில் எனது மனைவி, 10 மாத குழந்தை, வயதான அப்பா, அம்மா ஆகியோர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் நள்ளிரவில் என் மனையில் தாலிக்கொடி, செயின் ஆகியவற்றை அறுத்து சென்றுள்ளனர். மேலும் ராணுவத்தில் பணியாற்றும் நாங்கள் வருடத்திற்கு சில நாட்கள் மட்டுமே குடும்பத்துடன் இருக்கிறோம். இந்நிலையில் எங்கள் வீட்டிற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இங்கு ராணுவத்தில் எப்படி நாங்கள் பணியாற்ற முடியும். ஆகையால் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு தண்டை பெற்று தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.