காருண்யா பல்கலைக்கழகம் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதா என்பது குறித்து ஆய்வு - வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்
ஈஷா யோகா மையம் மற்றும் காருண்யா பல்கலைக்கழகங்கள் வன நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேட்டி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன விலங்குகளால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாகவும், அவற்றிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பது என்பதை குறித்து திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களுடன் கருத்துகேட்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு, மரக்கன்றுகள் மற்றும் கிராம வனக்குழுவினருக்கு சுழற்சி கடன், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மீண்டும் அகழி வனப்பகுதியில் இருந்து, வயல் வெளிப்பகுதிக்கு யானைகள் வராமல் இருக்க பழைய முறைப்படி 8 அடி ஆழம், 8 அடி அகலத்திற்கு அகழி வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், யானை மட்டுமின்றி இதர மிருகங்களும் வருவது தடுக்கப்படும். மழைக்காலத்தில் அகழியில் தண்ணீர் தேங்குவதால் நிலத்தடி நீர் உயரும். விரைவில் அத்திட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
மேலும் மக்கள் பலர் இந்த கூட்டத்தில் பல்வேறு இடங்களில் மயில்களால் பயிர்களுக்கு பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர். அவற்றுக்கென சரணாலயம் அமைக்க வேண்டுகோள் விடுத்தனர். எனவே, அது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆராய்ந்து எந்த அளவில் சாத்தியப்படும் என கலந்தாலோசனை செய்யப்படும். பின்னர் மயில்களுக்கான சரணாலயம் அமைப்பதற்கான திட்டத்தை நிறைவேற்ற நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், வன துறை அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியது. விவசாயிகளின் விளைபொருட்கள் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேளாண் துறை மற்றும் வனத்துறை மூலமாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ள அனைவரின் கருத்துக்களும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் கோவை ஈஷா யோகா மையத்தில் ஒரு சென்ட் நிலம் கூட ஆக்கிரமிப்பு இல்லை என அறிக்கை தரப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஆட்சி வந்துள்ளதால் மீண்டும் ஆய்வு நடத்தப்படும்.
அதுபோல காருண்யா பல்கலைக்கழகம் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதா எனவும் ஆய்வு நடத்தப்படும் என்றார். குறிப்பாக எம்.ஆர்.பாளையம் வன உயிரியல் பூங்கா தமிழகத்தில் தற்போதைய நிலையில் 23.98 சதவீதம் வனப்பகுதி உள்ளது. இதனை உயர்த்த தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஆண்டுக்கு 2.65 கோடி மரக்கன்றுகள் அனைத்து துறைகள் மூலம் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி எம்.ஆர். பாளையம் வன உயிரியல் பூங்கா இன்னும் ஓராண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.