சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் கைதான 3 பேர் - கொலைக்காண காரணங்கள் குறித்து தீவிர விசாரணை
ஆடு திருடர்களை விரட்டி சென்ற எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேரை கைது செய்து தீவிர விசாரனையை தொடங்கியுள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.
புதுக்கோட்டை அருகே நேற்று அதிகாலை ஆடு திருடர்களை விரட்டி சென்ற எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் தலைஞாயிறை சேர்ந்தவர் பூமிநாதன் (55) சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான இவர். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். நவல்பட்டு அருகே உள்ள சோழமா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி கவிதா மணி (50), இவர்களுக்கு குகன் (22) , என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அண்ணா பல்கலைகழகத்தில் எம்பிஏ படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நவல்பட்டு தலைமை காவலர் சித்திரைவேலுவும், தனித்தனியே இருசக்கர வாகனங்களில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் பூலாங்குடி காலனி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனத்தில் 4 பேர்கள் வந்தனர். இதில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஒரு ஆடு இருந்துள்ளது. இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவர்கள் நின்ற பகுதிக்கு சென்றபோது மர்ம நபர்கள் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர். ஆடு திருடர்களை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பூமிநாதன் சித்திரைவேலுவும் விரட்டி சென்றனர்.
அப்போது பூலாங்குடி காலனியில் இருந்து திருவெறும்பூர்-கீரனூர் சாலையில் சூரியூர், சின்னபாண்டூரார்பட்டி, லட்சுமணன்பட்டி, பாலாண்டார்பட்டி, வழியாக 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்தி சென்றபோது அந்த கும்பல் பள்ளத்துப்பட்டி ஊருக்குள் சென்றனர். இதனை பின்தொடர்ந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவர்களை விரட்டிச் சென்றார் பள்ளத்துப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரும் வழியில் குறுக்கே இருந்த ரயில்வே தரைப் பாலத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் அந்த கும்பல் அங்கேயே நின்று விட்டனர். தலைமை காவலர் சித்திரைவேல் வழிதவறி கீரனூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கும்பல் 4 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்து கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், அந்த தகவலை சித்திரை வேலுவுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். இதில் சித்திரைவேலு சம்பவ இடத்திற்கு வர தாமதமானதால் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் நண்பரான காவலர் குளத்தூர் சேகர் என்பவரை பூமிநாதன் தொடர்புகொண்டு நடந்த விவரத்தை தெரிவித்து உடனே சம்பவ இடத்திற்கு வரும்படி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அந்த கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமிநாதன் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயத்துடன் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது அதிகாலை நேரத்தில் அந்த வழியாக வயலுக்கு சென்ற கிராம மக்கள் இந்த கொலை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே பூமிநாதனின் நண்பர் சேகர் சம்பவ இடத்துக்கு வந்த போது பூமிநாதன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கீரனூர் காவல்துறையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உடனடியாக சேகர் தகவல் தெரிவித்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி (பொறுப்பு) திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணன் சுந்தர், திருச்சி மாவட்ட எஸ்.பி பொறுப்பு சுஜித் குமார், மற்றும் கீரனூர் நவல்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலை நடந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் காவல்துறையினர் கொலையான பூமிநாதன் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் முதல் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமா நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று மதியம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் திருச்சி மத்திய மண்டல ஐஜி (பொறுப்பு) மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், டிஐஜி சரவணன் சுந்தர், திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் ஆகியோர் வீட்டிற்கு நேரில் சென்று பூமிநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் பூமிநாதன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர் இதனைத் தொடர்ந்து திருவரம்பூர் தாசில்தார் செல்வகணேஷ் திமுக மாநகர செயலாளர் அன்பழகன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பூமிநாதன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்பு சோழமா நகரில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பூமிநாதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வைத்திருந்த வாக்கி டாக்கி மற்றும் தொலைபேசி ஆகியவை காணவில்லை, கொலையாளிகள் எடுத்து வீசி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் உள்ள குட்டையில் மோட்டார் போட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. அதில் ஹூ மற்றும் வாக்கி டாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. பூமிநாதன் பர்சை எடுத்த கொலையாளிகள் அதில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு அதனை அங்கேயே வீசி உள்ளனர். பூமிநாதன் தொலைபேசி காணவில்லை ஆனால் தொலைபேசி ஆனில் இருந்தாலும் அதே பகுதியில் லொக்கேஷன் காட்டுவதாலும் அங்கேயே இருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் செல்போன் கிடைத்தால் மட்டுமே அவர் யாருடன் பேசினார். என்ன பேசினார் என்பது குறித்தும் தெரியவரும் என்றனர் காவல்துறை அதிகாரிகள். சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க இலுப்பூர் டிஎஸ்பி அருண்மொழி, கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன், ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மேலும் பள்ளத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கடந்து குற்றவாளிகள் செல்லும் காட்சியை ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் வீடியோ பதிவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா வீடியோவையும் காவல்துறையினர் சேகரித்தனர். புதுக்கோட்டையில் இருந்து துப்பறியும் காவல்துறையினர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
மோப்பநாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது கொலையாளிகள் தாங்கள் கொண்டுவந்த ஆயுதங்களை அந்த பகுதியில் வீசி சென்றாரா என்று காவல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் எந்த தடையும் கிடைக்கவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தகவல் கேள்விப்பட்டு அந்த மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 405/2021 u/s 302IPC- ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை தனிப்படை காவல்துறையினர் 19 வயது நிரம்பிய மணிகண்டன், அவனுடன் இருந்த இரு இளஞ்சிறார்கள் உட்பட 3 நபர்களை கைது செய்து தீவிர விசாரனையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. காவல்துறை விசாரனையில் இவர்கள் கொலை செய்ய என்ன காரணம், இவர்கள் தான் கொலை செய்தார்களா? இல்லை வேறயாராவது செய்தார்களா? இதில் சம்பந்தபட்டவர்கள் யார் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர்.