புகையிலை , குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்த 10 கடைகளுக்கு சீல்! திருச்சியில் அதிரடி
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா விற்றதாக சுமார் 10 கடைகளுக்கு சீல் வைக்கபட்டன.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் தனிப்படை காவல் துறையினரை நியமனம் செய்து 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தி உள்ளார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்ற சம்பவங்கள் ஈடுபடுவது மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல்வேறு குற்றச்சம்பவங்களின் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான கஞ்சா, புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை தீவிரபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் உணவு பாதுகாப்பு பிரிவினர் அலுவலர் ரமேஷ் பாபு தலையில், இது போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பவர்கள் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களது கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு வார காலத்தில் திருவெறும்பூர் உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பான் மசாலா விற்றதாக சுமார் 10 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில்.. தமிழக அரசு இளைஞர்கள் புகையிலை பான்மசாலா குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகாமல் இருக்க தமிழக அரசு தமிழகம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு பிரிவினர் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் தினந்தோறும் ஒவ்வொரு பகுதிகளாக சென்று உணவு பாதுகாப்பு பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புகார்கள் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து புகார்கள் உண்மை என கண்டறிந்த பிறகு , காவல்துறை உதவியுடன் கடை உரிமையாளரை கைது செய்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது என்றனர். ஆகையால் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இதுபோன்று குற்ற செயல் ஈடுபட்டால் அவர்களுடைய கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.