திருச்சி உய்யக்கொண்டான் பகுதியில் புதிய சாலை: நீர்வளத்துறை களத்தில் இறங்கியது
திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை சந்திப்புக்கும் சுண்ணாம்புக்காரன்பட்டிக்கும் இடையே, உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரமாக ஒரு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.

தஞ்சாவூர்: அழகே... இனி திருச்சிதான் அழகே என்று தமிழகம் முழுக்க பாடல் குரல் ஒலித்து விடும் என்றுதான் தோன்றுகிறது. பேருந்து முனையம் வந்தது முதல் திருச்சி மாவட்டமே அழகு பெற்று வருகிறது. பல்வேறு திட்டங்கள் சட்...சட்டென்று திருச்சிக்கு வந்துக்கிட்டே இருக்கு. அப்படி ஒரு திட்டம்தான் இது.
திருச்சி மாவட்டத்தின் முக்கிய பகுதியான உய்யக்கொண்டான் பகுதியில் நீர்வளத்துறை சார்பில் புதிய சாலையானது அமைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் அந்த பகுதி மேலும் அழகாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி ஒரு திட்டம் பார்த்தீங்களா? தற்போதைய விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப வாகனப் போக்குவரத்தை சமாளிக்க இப்படி ஒரு சாலை அமைக்க முடிவு செய்து இருக்காங்க. வாங்க என்னன்னு பார்ப்போம்.
திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை சந்திப்புக்கும் சுண்ணாம்புக்காரன்பட்டிக்கும் இடையே, உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரமாக ஒரு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை திட்டம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் வெகுவாக குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக, வயலூர் சாலை தற்போது அதிக வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு ஒரு மாற்றுப் பாதையாக இந்த புதிய சாலை அமையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறையின் திட்டப் பிரிவுதான் இதை செயல்படுத்த இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் (Detailed Project Report) நெடுஞ்சாலைத்துறையினர் தயாரித்திருந்தனர். ஆனால், தற்போது இந்த சாலையை நீர் வளத் துறையே (WRD) அமைக்கும் என்று தெரிய வந்துள்ளது. காரணம் ஆற்றங்கரைகள் மற்றும் அதன் கரைகளை நிர்வகிக்கும் அதிகாரம் நீர் வளத் துறைக்கு உள்ளது. அதனால் இந்த சாலை அமைக்கும் திட்டத்தை நீர்வளத்துறை கையில் எடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த புதிய சாலை, திருச்சி-குழுமணி-ஜெயபுரம் சாலை (MDR-461) மற்றும் அல்லித்துறை-தகமலை சாலை (MDR-12) போன்ற முக்கிய மாவட்ட சாலைகளுக்கும் ஒரு மாற்றுப் பாதையாக செயல்படும். புதிதாக அமைக்கப்படும் இந்த சாலை இரண்டு வழித்தடங்களுடன் அமைய உள்ளது. அகலம் 7.5 மீட்டர் ஆக இருக்கும். இந்த சாலை திட்டத்திற்காக மொத்தம் ரூ.186 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், நிலம் கையகப்படுத்துவதற்காக மட்டும் சுமார் ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரமாக சில இடங்களில் சுமார் 40,000 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சாலை, திருச்சியில் தற்போது திருச்சி மாநகராட்சி சார்பில் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றங்கரைகளில் அமைக்கப்பட்டு வரும் உள் இணைப்பு சாலைகளுடனும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) அமைக்கும் அரை வட்ட சாலை (semi ring road) உடனும் இணைக்கப்படும். இந்த அரை வட்ட சாலை, நகரைச் சுற்றியுள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும்.
புதிய சாலை, புத்தூர் அணைக்கட்டு மற்றும் நீர்வழிப் பாதையை கடக்கும்போது உயரமாக அமைக்கப்படும். இது உய்யக்கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில், குழுமாயி அம்மன் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த சாலை, பஞ்சப்பூரில் (பழைய பேருந்து நிலையம் அருகே) இருந்து கரூர் நெடுஞ்சாலை வரை கோரையாறு கரையோரமாக திருச்சி மாநகராட்சி அமைக்கும் புதிய இணைப்பு சாலையுடன் இணைக்க ஒரு உயர்மட்ட சாலை சந்திப்பையும் கொண்டிருக்கும்.
இந்த சாலையை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப வாகன போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் வயலூர் பிரதான சாலை திணறுகிறது. இந்த சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருச்சி அழகாக மாறுவது மட்டுமின்றி போக்குவரத்தும் இடையூறின்றி இயங்கும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.





















