கொல்கத்தாவிலிருந்து சரக்கு ரயிலில் 27.30 லட்சம் சாக்குகள் தஞ்சைக்கு வருகை
தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் 5,460 பண்டல்களில் ஒரு பண்டலுக்கு 500 சாக்குகள் வீதம் 27 லட்சத்து 30 ஆயிரம் தற்போது வந்தடைந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கொல்கத்தாவில் இருந்து 27.30 லட்சம் சாக்குகள் வந்துள்ளது. இவை கொள்முதல் நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வழக்கம்போல் குறுவை சாகுபடிக்காக வழக்கமான தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

மேட்டூர் அணை திறந்ததும், குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, எந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தனர். மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் வேளாண்மை துறையின் கிடங்குகளில் வைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் வேளாண்மை துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 1 லட்சத்து 93 ஆயிரத்து 771 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தனர். தொடர்ந்து, கடந்த (ஜூலை) 31-ந்தேதி வரை தஞ்சாவூர் மாவட்ட த்தில் குறுவை பருவத்தில் இலக்கை மிஞ்சி 1 லட்சத்து 95 ஆயிரத்து 130 ஏக்கரில் நடவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு 1 லட்சத்து 52 ஆயிரத்து 646 ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 42 ஆயிரத்து 484 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. மேலும், டெல்டாவின் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து குவித்தனர். சாக்குகள் மற்றும் லாரிகள் இல்லாத நிலையால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன. மேலும் விவசாயிகள் நெல்லை சாலைகளில் குவித்து காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து தஞ்சை ரயில் நிலையத்திற்கு 27 லட்சத்து 30 ஆயிரம் சாக்குகள் வந்தன. இதை அனைத்தும் லாரிகள் மூலம் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறவை நெல் சாகுபடிக்கு 2025 - 2026 கொள்முதல் பருவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு போன மாதம் இறுதி வரை 352 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட தற்போது 291 கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது இதுவரை 2,15,448 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு லட்சத்து 92ஆயிரத்து 931 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக நகர்வு செய்யப்பட்டுள்ளது
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருப்பிலுள்ள 22,517 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு நகர்வு செய்யப்பட்டு வருகின்றன கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு தேவையான 8 லட்சத்து 6 ஆயிரத்து 563 சாக்குகளும் சேமிப்புக் கிடங்குகளில் 12 லட்சத்து 73 ஆயிரத்து 628 சாக்குகளும் இருப்பில் உள்ளது மேலும் கொல்கத்தா சணல் ஆலை மூலம் மேற்கு வங்க மாநிலம் பத்ரேஸ்வர் ரயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் 5,460 பண்டல்களில் ஒரு பண்டலுக்கு 500 சாக்குகள் வீதம் 27 லட்சத்து 30 ஆயிரம் தற்போது வந்தடைந்தது.
இந்த சாக்குகள் அனைத்தும் 165 தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தற்போது அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்
மேலும் தஞ்சை மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு சரக்கு ரயிலில் மூலம் மொத்தம் 54 லட்சத்து 60 ஆயிரம் சாக்கு பைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















