மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான திருச்சி சேர்ந்த திருநங்கை ரியானா
இம்மாதம் டிசம்பரில் டெல்லியில் நடைபெறயுள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் திருச்சி திருநங்கை ரியானா பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். தற்போது தான் திருநங்கைகளுக்கான முக்கியத்துவத்தை இந்த அரசும் அளிப்பதால் அவர்கள் தங்களை இந்த சமூகத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திருநங்கைகளில் ஒரு சிலர் அவர்களுக்கான இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி பயணித்தாலும் , பலர் அதற்கான தேடுதலை தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் ஒருவரான ரியானா வயது (26). என்ற மூன்றாம் பாலினத்தவரை சந்தித்து போது... திருச்சியில் கல்லுக்குளியில் பிறந்து, வளர்ந்து பள்ளி படிப்பை ஆர். சி. மேல்நிலைப் பள்ளியில் பயின்று முடித்தேன் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், பள்ளி படிப்புடன் நிறுத்தி விடாமல் புனித வளனார் கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் படித்து, ஜமால் முகமது கல்லூரியில் எம்.எஸ்.சி இயற்பியல் படித்துள்ளார். தற்போது திருநங்கைகளின் வளர்ச்சிக்காக செயல்படும் லீடூ என்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டே கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து மாடலிங்கல் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் நடனத்தில் டிப்ளமோ படித்துள்ளார். அவ்வப்போது நடன பயிற்சி அளிப்பதும், குறும்படம் போன்று தன்னுடைய கேரியரை முன்னோக்கி நகர்த்தி வருகிறார்.
மேலும் அவருடைய மாடலிங் குறித்து பேசுகையில்... "கடந்த 2022 ஏப்ரல் 18 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் பங்கேற்று முதல் ரன்னராக தேர்வு செய்யப்பட்டேன். இங்கு மாடலிங் புதிய ரக ஆடைகள், ஆபரணங்கள், சிகை அலங்காரம், என்று பலவிதமான தோற்றங்களில் மேடைகளில் கேட் வாக்கில் நடந்து வந்து, தங்களுடைய அலங்காரங்களை பார்வையாளர்களை பார்க்க வைப்பது. இப்படி தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளேன். இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்கும் போட்டியாளர்கள், அனைவரையும் அவர்களுடைய முந்தைய சாதனைகள், அவர்களுடைய மாடலிங் அனுபவம், உள்ளிட்டவற்றை இணையதள மூலம் டெல்லியில் இருந்து, ஒரு குழு ஆய்வு செய்து அதன் பின் அவர்களை தேர்வு செய்வார்கள். அதில் தமிழகத்தில் இருந்து நான் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அதற்கான ஆடிசன் நிகழ்ச்சியும் கடந்த செப்டம்பரில் நடந்து முடிந்து விட்டது. இந்த மாதம் டிசம்பர் டெல்லியில் மிஸ் இந்தியா போட்டியானது நடைபெற உள்ளது .
இந்த போட்டியில் வெற்றி பெறுவது தான் என்னுடைய இலக்கு என்று கூறினார். இன்றைய சூழ்நிலையில் என்னை போல் இருக்கும் அநேக திருநங்கைகள் தங்களுடைய பெற்றோர்கள், ஆதரவு இல்லாதது காரணமாக வழி விலகி போகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களின் ஆதரவு என்பது கட்டாயம் தேவை, என்பதை என்னை போன்ற திருநங்கைகளின் பெற்றோர்கள் உணர வேண்டும். என்னுடைய பெற்றோர்கள் தரும் அன்பும், அரவணைப்பும், தான் நான் இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன். என்னுடைய வீட்டில் பெற்றோர் மட்டுமல்லாமல் என்னுடைய அண்ணன், அண்ணி மற்றும் உறவினர்கள் அனைவரும் என்னை ஆதரித்து அன்பு காட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர். என்னுடைய வாழ்வில் இலக்கு என்னை போன்றவர்களை அரவணைத்து அவர்களை மேம்படுத்துவது தான்" என்று கூறினார்.