திருச்சியில் ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை - புதிய கமிஷனர் சத்தியபிரியா
திருச்சி மாநகரில் ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்று கொண்ட திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா கூறினார்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் மத்திய மண்டல ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் டி.ஐ.ஜி.யாக இருந்த சத்தியபிரியா பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சத்தியபிரியா பேசுகையில், "சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி முக்கியமான நகரமாகும். இங்கு ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்படும். பகல் நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரக்குவாகனங்களை நிறுத்துவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாநகரில் பெரும்பாலான இடங்களில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் எளிதாக சென்று வரும் வகையில் மற்ற துறைகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாநகரில் ஏற்கனவே பீட் போலீஸ் முறைஅமலில் உள்ளது. தேவைப்படும்பட்சத்தில் கூடுதலாக பீட் போலீசாரை நியமித்து சங்கிலி பறிப்பு, குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.
திருச்சி மாநகரில் இந்த ஆண்டில் இதுவரை 188 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகரின் முதல் பெண் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளது பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக என்னுடைய சிறந்த பங்களிப்பை கொடுப்பேன்" என தெரிவித்தார்.
திருச்சி மாநகரத்தின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா:
இவர் கடந்த 1997-ம் ஆண்டு காவல்துறையில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிக்கு சேர்ந்தார். 2006-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றினார். பின்னர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காஞ்சீபுரத்தில் பணியாற்றினார். இவர் 2012-ம் ஆண்டு ஜூலை முதல் 2013-ம் ஆண்டு பிப்ரவரி வரை திருச்சி மாநகர துணை கமிஷனராக பணியாற்றியபோது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் தெற்கு சூடான் நாட்டுக்கு சென்று ஐ.நா.பணிக்குழுவில் சேர்ந்து காவல் ஆலோசகராக ஓராண்டு பணியாற்றினார். 2014-ம் ஆண்டு மீண்டும் இங்கு பணியில் சேர வந்தபோது, தமிழக காவல்துறையில் அனுமதி பெறாமல் தெற்கு சூடான் சென்றதாக கூறி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்ததால் சத்தியபிரியா மீண்டும் தமிழக காவல்துறையில் பணியில் இணைத்து கொள்ளப்பட்டார். இவரது மெச்சத்தகுந்த பணியை பாராட்டி 2020-ம் ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. சத்தியபிரியா தற்போது திருச்சி மாநகரத்தின் முதல் பெண் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்