DVAC Raid: திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சொந்தமான 3 இடங்களில் ரெய்டு..!
திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் அவர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் லஞ்சஒழிப்பு துறை காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் வீடு, அவர்களது நண்பர்கள் வீடு என 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காலை முதலே சோதனை நடத்தி வருகின்றது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரேஷன் கடைகளுக்கு பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கடந்த அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 44 லட்ச ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காமராஜ் மட்டுமின்றி அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் 2015 முதல் 2021 வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் அரசு பதவியை தவறாக பயன்படுத்தியதுடன், பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது பெயரிலும், குடும்பம் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் சொத்துகளை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் வரிசையாக விசாரணை வளையத்தில் சிக்கி வருகிறார்கள். முதலில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து வரிசையாக எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர், என்று பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன, இதனை தொடர்ந்து திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாசம் ஹோட்டல், கே.கே. நகர் உழவர் சந்தை எதிரில் உள்ள ஐயர் பங்களா மற்றும் தில்லைநகரில் உள்ள ஒரு வீடு ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்