திருச்சி, சுற்றுவட்டார இளைஞர்களுக்கு தரமான வாய்ப்பு; பாதை விரித்த பிரபல ஐடி நிறுவனம்- இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பா?!
திருச்சி, கரூர் பை பாஸ் சாலையில் உள்ள சிவம் பிளாசாவில் அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உறையூரில் நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

தமிழ் நாட்டின் இரண்டாம் கட்டத் தலைநகரமான திருச்சியில் அசெஞ்சர் நிறுவனம் கால் பதிக்க உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து முடிந்துள்ளன.
தமிழ் நாட்டுக்கு அரசியல் ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் புகழ்பெற்ற பகுதி திருச்சி. சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களை அடுத்து முக்கியமான மாவட்டமாக உள்ளது. திருச்சியில் சர்வதேச விமான நிலையம், புகழ்பெற்ற பெல் நிறுவனம், டைடல் பார்க், ஒலிம்பிக் அகாடமி உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இங்கே விரைவில் பிரபல எம்.என்.சி. ஐ.டி. நிறுவனமான அசெஞ்சர் கால் பதிக்க உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து முடிந்துள்ளன. மேரியாட் ஓட்டலில் அசெஞ்சர் குழுவினர் சந்தித்து இதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். இதன் மூலம் திருச்சியில் தொழில்நுட்ப பணிகள் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக திருச்சி, கரூர் பை பாஸ் சாலையில் உள்ள சிவம் பிளாசாவில் அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உறையூரில் நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. முதல் கட்டமாக சுமார் 500 பேருக்கு வேலை அளிக்கபப்டும் என்றும் பிறகு இது விரிவுபடுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட பிற நிறுவனங்களும் திருச்சியில் தங்களின் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் திருநெல்வேலி, மதுரை மற்றும் சேலத்தில் அசென்ச்சர் மேலும் 3 அலுவலகங்களைக் கொண்டுவர வேண்டும். அங்கு ஒருவேளை நகர மக்கள்தொகைக்கு ஏற்ப அதிக அல்லது குறைந்த பணியாளர்களின் எண்ணிக்கை இருக்கலாம் என்றும் இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் முதல் அமைச்சர் ஸ்டாலினை அமெரிக்க நாட்டின் JABIL INC, நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஆன்ட்ரு பிரிஸ்லி (Mr.Andrew Priestly) தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து சந்தித்து பேசினார். ஏற்கெனவே திருச்சியில் 2 ஆயிரம் கோடி மதிப்பில் ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது குறிப்பிடத்தக்கது.





















