திருச்சி மத்திய பேருந்து நிலையம் அமைக்க 460 கோடியில் திட்ட அறிக்கை தயார்...!
’’புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட 460 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்ட அறிக்கையை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தயார் செய்துள்ளனர்’’
திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் ஆகும். தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 460 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட இருப்பதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முன்வரைவு திட்டம், சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புதிய பேருந்து நிலையம், திருச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூர் பகுதியில் 115.68 ஏக்கர் பரப்பளவில் அமைக்க இடம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் பக்கத்திலேயே, சரக்கு முனையமும் அமைக்கப்பட உள்ளது. பஞ்சப்பூர் பகுதியில் 575 ஏக்கர் பரப்பளவிற்கு நிலம் இருப்பதாக தெரிவித்து உள்ள அதிகாரிகள், திருச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கே. சாத்தனூர் மற்றும் பிரட்டியூர் (கிழக்கு) கிராமங்களை சேர்ந்த பகுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
புதிதாக அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில், நகர பேருந்துகள், அரசு போக்குவரத்து கழக விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் என தனித்தனியாக அமைக்கப்பட உள்ளதாகவும், சரக்கு முனையம் என்பது, திருச்சி மக்களின் நீண்டநாள் கனவாக உள்ளது, எனவே இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய திட்டத்தின் கீழ், சரக்கு முனையமும் அமைக்கப்பட உள்ளது. திருச்சி–புதுக்கோட்டை, திருச்சி–திண்டுக்கல் மற்றும் திருச்சி சென்னை வழித்தடங்கள் எளிதில் அணுகக் கூடிய பகுதியாக இது உள்ளது. சரக்கு முனையத்தை அமைக்க, உள்ளாட்சி நிர்வாகம் இதை சிறந்த இடமாக அங்கீகரித்து உள்ளது. மேலும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் லாரிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றன. இதுமட்டுமல்லாது, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 2,245 பேருந்துகளும், 7,975 பேருந்து சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள மத்திய பேருந்து நிலையத்தை நாள்தோறும் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 2006ஆம் ஆண்டிற்கு பிறகு, இடப்பற்றாக்குறை காரணமாக இது மேம்படுத்தப்படவே இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து விரைவில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் வணிக வளாகங்கள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தங்கள், தேவையான அளவிற்கு பேருந்து பாதைகள் மட்டுமல்லாது, எரிபொருள் நிலையம், குளிர்சாதன பொருட்கள் கிட்டங்கி வசதியுடன் கூடிய சரக்கு முனையமும் அமைக்கப்பட உள்ளது எனவும், திருச்சி மக்கள் தொகை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை 11.45 சதவீதம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் வரையறுக்கப்பட்டு உள்ளது. பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைய உள்ள நிலையில், அங்கு காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், அஞ்சல் நிலையம் உள்ளிட்ட சேவை நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. 100 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய திட்டத்திற்காக, 460 கோடி ரூபாய் முதற்கட்ட மதிப்பீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் மிக அதிக மதிப்பிலான திட்டம் இது ஆகும். இந்த பேருந்து முனைய பணிகளை சிறந்த முறையில் நிறைவேற்றும் வகையிலான பணிகளை மேற்கொண்டு இருப்பதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்.