Pudukottai: கோயில் கும்பாபிஷேக விழா - சீர்வரிசை எடுத்து சென்று அசத்திய இஸ்லாமியர்கள்..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசலில் உள்ள மங்களநாயகி அம்பாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை எடுத்து சென்று இஸ்லாமியர்கள் அசத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே நெடுவாசல் கிராமத்தில் பழமை வாய்ந்த மங்களநாயகி அம்பாள் உடனுறை பாலாண்ட ஈஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நாடியம்மன் உள்ளிட்ட பரிவார சன்னதிகளும் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் உள்ள பல்வேறு கிராம மக்கள் நாட்டியக் குதிரை ஆட்டங்கள், செண்டை மேளங்கள் முழங்க கண்கவர் வாணவேடிக்கையுடன் நெடுவாசல் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆவணம் மற்றும் காசிம்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தட்டுகளை கையில் ஏந்தியபடி நெடுவாசல் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். அவர்களை நெடுவாசல் கிராமமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் மாலை அணிவித்து வரவேற்று இஸ்லாமியர்களை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் இஸ்லாமியர்கள் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்கள் மற்றும் பணத்தை விழாக்குழுவினர் பெற்றுக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக இப்பகுதி கிராமங்களில் உள்ள இந்து கோவில்களின் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும், அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது. மதங்களை கடந்து மனித நேயத்தை தங்கள் பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போற்றி வருகின்றனர். புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களை பொறுத்தவரையில் இந்து-முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி ஒவ்வொரு கிராமத்தினரும் உறவினர்களாக மதங்களை கடந்து மனித நேயத்தோடு அனைவரும் பழகி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கிராம பகுதிகளில் நடைபெறும் அனைத்து நல்ல காரியங்கள் மற்றும் துக்க காரியங்கள் எதுவாக இருந்தாலும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் அதில் பங்கேற்போம். ஒவ்வொரு ஆண்டும் கோயில்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும் இஸ்லாமிய நண்பர்கள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து எங்களை வாழ்த்தி செல்வார்கள். அதேபோன்று இஸ்லாமிய நண்பர்கள் விழாக்களில் நாங்கள் எங்களுடைய குடும்பத்தோடு சென்று வாழ்த்துக்களை தெரிவிப்போம். ஜாதி, மதம் இவற்றை கடந்து நாங்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்று மகிழ்ச்சியாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்