புதுக்கோட்டை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டி 33 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், செங்களாக்குடி, அரசடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1,302 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டி 33 பேர் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, செங்களாக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 715 காளைகளும், 116 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முதலில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து, மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். பின்னர் மாடுபிடி வீரர்கள் 25 நபர்கள் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை. பின்னர் மற்ற காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். இதில் பல காளைகள் பிடிபடாமல் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியபடி சீறிப்பாய்ந்து சென்றன. சில காளைகள் களத்தில் நின்று சுற்றி சுற்றி மாடுபிடி வீரர்களை விரட்டி சென்று முட்டியது. அப்போது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள், பொதுமக்கள் விசில் அடித்தும், கைத்தட்டியும் ஆரவாரம் செய்தனர். காலை 8.10 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2 மணிவரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், மிக்சி, மின்விசிறி, பாத்திரம், அரிசி மூட்டை உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் திருச்சி காஜாமலையை சேர்ந்த குருமூர்த்தி (வயது 23), மணிகண்டத்தை சேர்ந்த மகாதேவன் (27), பார்வையாளர் கும்பக்குடியை சேர்ந்த அரவிந்தன் (28) ஆகிய 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கண்டு களித்தனர். கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கோட்டுவேலன், இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செங்களாக்குடி, எஸ்.மேலப்பட்டி, மேலக்காடு ஆகிய கிராமமக்கள் செய்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 13 பேர் காயம் அடைந்தனர். இதில், படுகாயம் அடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விராலிமலை, ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1,302 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டி 33 பேர் காயம் அடைந்தனர்.