(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: பெரம்பலூரில் டயர் தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது
பெரம்பலூரை அடுத்த நாரணமங்கலத்தில் உள்ள டயர் தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கில் காவல்துறையினர் 2 பேரை கைது செய்தனர்.
பெரம்பலூரை அடுத்த நாரணமங்கலத்தில் உள்ள டயர் தொழிற்சாலையில் தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தை சேர்ந்த பழனியின் மகன் கமலஹாசன்(வயது 35) வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி மஞ்சுளாவுடன்(24) சிறுவாச்சூரில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து, வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுநடுவலூரில் மாரியம்மன் கோவில் முன்பு கமலஹாசன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில், புதுநடுவலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த முருகேசனின் மகன் மனோஜ்குமார்(24), அதே பகுதியை சேர்ந்த கணேசனின் மகன் கார்த்திகேயன்(27) ஆகியோர் கமலஹாசனை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மனோஜ்குமார், கார்த்திகேயன் ஆகியோர் அரணாரை பிரிவு சாலை அருகே வந்தபோது, நேற்று அவர்களை போலீசார் பிடித்து கைது செய்து, விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து கைது செய்யபட்டவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவிக்கையில், கடந்த 11-ந்தேதி இரவு 11.30 மணி அளவில் கமலஹாசன் வேலையை முடித்துக்கொண்டு தனது நண்பர் அருணின் மோட்டார் சைக்கிளில் சிறுவாச்சூருக்கு திரும்பினார். பின்னர் அங்கிருந்து அவர் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மனோஜ் குமாரின் மோட்டார் சைக்கிளில் அவரும், கார்த்திகேயனும் வந்துள்ளனர். அவர்களிடம் கமலஹாசன் 'லிப்ட்' கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த மனோஜ்குமாரும், கார்த்திகேயனும், மது குடிப்பதற்கு கமலஹாசனிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து கமலஹாசனை அவர்கள் தாக்கி, மோட்டார் சைக்கிளில் அமர வைத்து புதுநடுவலூருக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்ததால், மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் சேதமடைந்த மோட்டார் சைக்கிளை சரி செய்ய ரூ.20 ஆயிரம் கேட்டு மீண்டும் அவரை தாக்கி உள்ளனர். அப்போது கமலஹாசன் தன்னிடம் பணம் இல்லை என்றும், தனது மனைவியிடம்தான் பணம் உள்ளது என்றும் கூறியதால், அவரது மனைவி மஞ்சுளாவை செல்போனில் தொடர்பு கொண்டு மனோஜ்குமார் பேசியுள்ளார். அப்போது மஞ்சுளா தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும், காலையில் பேசிக்கொள்ளலாம் என்றும், கமலஹாசனை உடனடியாக வீட்டிற்கு பாதுகாப்புடன் அனுப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்போம் என்றும் கூறியுள்ளார். இதனால் செல்போனை துண்டித்துவிட்டு, 2 பேரும் சேர்ந்து கமலஹாசனை தாக்கியுள்ளனர். பின்னர் புதுநடுவலூர் கிராமத்திற்கு அவரை அழைத்துச்சென்று அங்கே கட்டையால் கமலஹாசனை இருவரும் தாக்கியதில், கமலஹாசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்