"நாடாளுமன்ற தேர்தல் தனி மனிதன் வெற்றி இல்லை, நமது வெற்றி இந்தியாவை காப்பாற்றும்" - ஆ.ராசா பேச்சு
மணிப்பூரில் தொடர் வன்முறை, பெண்களின் அவலநிலை இந்தியாவிற்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது - திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா பேச்சு
திருச்சி மாநகர் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த சுமார் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு என 30 ஆயிரம் பேருக்கு பிரியாணி தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துறைமுருகன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மற்றும் பல அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசுகையில், “திருச்சி மாநகரில் திமுக சார்பாக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறை கூட்டம் மலைக்கோட்டை மாமன்னன் நேருவுக்கும், தமிழர்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம். இந்திய துணை கண்டத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணியை முதலில் தொடங்கியது திமுக மட்டும் தான். மேலும் தலை எழுத்தை மாற்றும் திறமை கொண்டவர்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள். இந்த கூட்டத்தின் வாயிலாக நான் கூறுவது.. பொது மக்களிடையே திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு செய்த திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் மக்களை காப்பற்ற தன் உயிரை பொருட்படுத்தாமல் உழைத்தவர் மு.க.ஸ்டாலின். தொற்று வைரஸ் பரவலை தடுக்க வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் விரைந்து செய்து கொடுத்தும், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் உயிரை காப்பாற்றியவர் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவார்.
குறிப்பாக ஆட்சியில் இல்லாமல் இருந்த போது கொரொனா அதிகமாக பரவல் காலத்தில் ஒன்றிணைவோம் வா என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தியவர். இதனால் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், மற்றும் பல திமுக நிர்வாகிகளை நாங்கள் இழந்தோம், ஆனாலும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டவர் நம் தலைவர் ஆவார். குறிப்பாக உலக நாடுகள் அனைத்தும் திரும்பி பார்க்கும் வகையில் உலக செஸ் போட்டியை 4 மாதங்களில் ஏற்பாடு செய்து மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைந்தவர் நம் தலைவர் ஸ்டாலின் ஆவார்.
மேலும், மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனை எண்ணில் அடங்காதவை ஆகும். அதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் அவர்கள் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தது திமுக தான். அதேபோல் தற்போது இருக்கும் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் தந்தை வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மகளிர்க்கு பேருந்தில் இலவசம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு , உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். இதனை அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். மணிப்பூரில் தொடர் வன்முறை, பெண்களின் அவலநிலை இந்தியாவிற்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது. ஆகையால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் தான், மக்களையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் , காப்பாற்ற முடியும். ஆகையால் நாடாளுமன்ற தேர்தல் தனி மனிதன் வெற்றி இல்லை, நமது வெற்றி இந்தியாவை காப்பாற்றும். நமது செயல்கள், திட்டங்களை சமூகவலைதளம் மூலம் மற்றும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.