‘எல்லாம் நல்லபடியா நடக்கணும் கருப்பசாமி..’ கிடா வெட்டு நடத்தி விருந்து வைத்த அமைச்சர் கே.என். நேரு - எதற்காக தெரியுமா?
பஞ்சப்பூர் பேருந்து முனைய திறப்பு விழா எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்கணும்னு ரெட்டமலை ஒண்டி கருப்பசாமி கோயிலில் 15 கிடாக்கள் வெட்டி நிர்வாகிகளுக்கு விருந்தளித்து இருக்கிறார் அமைச்சர் கே.என். நேரு.

திருச்சி: கிடா வெட்டு நடத்தினதே எந்த பிரச்னையும் இல்லாம நல்லபடியா நடக்கணும்னு... ஆனா இதுவே பிரச்சினை ஆகும் போல என்று அமைச்சர் நேரு நொந்து கொள்ளும் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு விழா வரும் மே மாதம் 9 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க இருக்கு. இந்த பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திறப்பு விழா எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்கணும்னு ரெட்டமலை ஒண்டி கருப்பசாமி கோயிலில் 15 கிடாக்கள் வெட்டி நிர்வாகிகளுக்கு விருந்தளித்து இருக்கிறார் அமைச்சர் கே.என். நேரு. ஆரம்பம் நல்லா இருக்கணும்னு நினைச்சு செஞ்சா இதுலயும் வெடியை வைக்கிறாங்க என்று அமைச்சர் நொந்து கொள்ளும் அளவிற்கு சம்பவமும் நடந்து இருக்கு.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் கிளாம்பாக்கத்திற்கு இணையாக பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.400 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து முனையத்தால் பஞ்சப்பூர் மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மட்டுமல்லாது சோலார் திட்டங்கள், சரக்கு வாகன நிறுத்த முனையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.
இதோடு திருச்சி டைடல் பார்க்கும் பஞ்சப்பூரில் தான் அமைய இருக்கிறது. பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை பொருத்தவரை ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், எஸ்கலேட்டர், லிஃப்ட், ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்விடம், உணவகம், கழிவறை, 24 மணி நேர கண்காணிப்பு, உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், புல்வெளி, பூங்கா, நடைபாதை என ஏராளமான வசதிகளுடன் திறப்பு விழா காண உள்ளது. வரும் மே மாதம் 9ம் தேதி இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் திறந்து வைக்கிறார். இந்நிலையில் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து முனைய திறப்பு விழா எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற ரெட்டமலை கருப்புசாமி கோயிலில் நேற்று 15 கிடாய்களை வெட்டி அமைச்சர் கே.என்.நேரு வழிபாடு நடத்தி இருக்கிறார்.
இதற்காக கோயிலுக்கு வந்த அவர் சிறப்பு வழிபாடு செய்தாராம். தொடர்ந்து கிடாக்கள் சமைக்கப்பட்டு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டதாம். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மத்திய மாவட்ட துணை செயலாளர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் கட்சியில் சில நிர்வாகிகளை செல்வம் அமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர் என்கிறார்கள் திருச்சி மாவட்ட உடன்பிறப்புகள். பல நிர்வாகிகளுக்கு விருந்து குறித்து முறையாக தெரிவிக்காமல் தங்களது ஆதரவாளர்களை மட்டும் செல்வம் அழைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர் கே.என். நேரு மீதும் சில நிர்வாகிகள் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது என்னப்பா வம்பா இருக்கு... எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாதுன்னு கிடா வெட்டினா... அதுவே வம்புல இழுத்து விட்டுடும் போல இருக்கே என்று அமைச்சர் நொந்து போய் இருக்கிறார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

