அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை புதுக்கோட்டை வருகை - மாவட்டத்தில் என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
ஆய்வுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை புதுக்கோட்டை வருகை தருகிறார்
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் மாவட்டம் வாரியாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டைக்கு நாளை (வியாழக்கிழமை) வருகை தருகிறார். காரைக்குடி மார்க்கத்தில் இருந்து கார் மூலம் அவர் புதுக்கோட்டைக்கு மதியம் 1.50 மணி அளவில் வருகிறார். வருகிற வழியெங்கும் அவருக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். புதுக்கோட்டை டவுனில் ரோஜா இல்லத்தில் மதியம் தங்கி சிறிது ஓய்வெடுக்கிறார். அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் துறைவாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசின் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் ஆய்வுக்கூட்டத்திற்கு பின் மாலை 6.15 மணிக்கு ஆலங்குடியில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருச்சி புறப்படுகிறார். வழியில் இரவு 8.30 மணி அளவில் கீரனூரில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் வீட்டிற்கு அவர் செல்கிறார். அங்கு செல்லபாண்டியனின் தந்தை மறைவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு திருச்சி விமானநிலையம் புறப்பட்டு செல்கிறார். அமைச்சரான பின்பு முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் அவரை வரவேற்க தி.மு.க. சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் அவர் கலந்தாய்வு மேற்கொண்டார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்