திருச்சியில் 815 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 815 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் 1989 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். மீண்டும் 1996 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் வகையில் திட்டத்தினை விரிவு படுத்தினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி. திருச்சி மாவட்டத்தில் 8,213 மாணவர்களுக்கும் 12.186 மாணவியர்களுக்கும் சேர்த்து 2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கு மொத்தம் 20.399 மிதிவண்டிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விழாவில் 815 மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் இதுவரை 9022 மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் போக்குவரத்து மிக கடினமான போக்குவரத்தாக இருந்து கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது நாள் ஒன்றுக்கு பதிவான வாகனங்கள் 5000 ஆக இருந்தது. ஆனால் தற்போது 8000 வாகனங்கள் வரை பதிவாகும் சூழ்நிலை உள்ளது. அதற்கேற்ப சாலை வசதியை முடிந்தவரை விரிவாக்கம் செய்து கொண்டு வருகிறோம். எனவே சாலையில் சைக்கிளில் செல்லும் மாணவர்கள் கவனமுடன் பொறுமையாக பயணிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.39 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு ஆண்டும் 2000 வகுப்பறைகள் புதிதாக கட்ட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கூறி உள்ளார். அதிலும் கிராம புறங்களில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்து தர உத்தரவிட்டுள்ளார்கள். காலை உணவு திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்கள். ஆகவே அரசு வழங்கக்கூடிய திட்டங்கள் மூலம் மாணவர்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப.., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் த.ராஜேந்திரன். முதன்மை கல்வி அலுவலர் திரு.சிவகுமார். மண்டல தலைவர்கள். மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்