திருச்சியில் மாத வாடகைக்கு கார்களை எடுத்து விற்பனை செய்த நபர் கைது - 9 கார்கள் பறிமுதல்
மாத வாடகைக்கு கார்களை எடுத்து மோசடியில் ஈடுபட்ட நபரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 9 கார்கள் மீட்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவர் கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தெரிந்த நபர் மூலமாக, திருவானைக்காவல் ஸ்ரீராம் கார்டன் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் அறிமுகம் ஆனார். நந்தகுமார் தனது காரை மாதவாடகை 45 ஆயிரம் தருவதாக சக்திவேலிடம் ஒப்பந்தம் செய்தும், அதற்கு 10 ஆயிரம் முன்பணமாக பெற்று காரை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஒருமாதம் கழித்து வாடகை தராமலும், காரையும் திருப்பி தராமலும் சக்திவேல் இருந்து வந்துள்ளார். சக்திவேலின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து தனது காரை மீட்டு தரக்கோரி நந்தகுமார் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார். இதன்படி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தொடர் தீவிர விசாரணையில் ஆனந்திமேட்டை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் 2 கார்களையும், திருவெறும்பூரை சேர்ந்த நந்தகுமார், வாளவந்தான் கோட்டையை சேர்ந்த ஜெயபாலன், கீழ அடையவளஞ்சான் தெருவை சேர்ந்த சசிகலா, முசிறியை சேர்ந்த செல்வராஜ், மண்ணச்சநல்லூரை சேர்ந்த பாலசந்திரன், கரூர் கோட்டையார் தோட்டத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோரிடம் இருந்து தலா ஒரு காரையும் இதே போன்று ஏமாற்றியிருப்பதாக தெரியவந்தது.அதைத்தொடர்ந்து சக்திவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
சக்திவேலிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 9 கார்களையும் காவல்துறையினர் மீட்டனர். பின்னர் சக்திவேல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட 9 கார்களையும் அவற்றின் உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. மேலும் இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து கார்களை மீட்டு கொடுத்த ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் பாராட்டினார். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற நம்பிக்கை மோசடியில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் எச்சரித்தார்.