’சொந்த தம்பியையே கழுத்தறுத்து கொன்ற அண்ணன்’ காரணம் இதுவா..?
அண்ணன்கள் மற்றும் தம்பிக்கு இடையே பூர்வீக நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

தஞ்சாவூர்: தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் அண்ணன்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50, ஆயிரம் அபராதம் விதித்து கரூர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், நங்கவரம் காவல் நிலைய சரகம், நெய்தலூர் காலனி, சேப்ளாபட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் காத்தான் (45), சுப்பிரமணி (40), மற்றும் கந்தசாமி, (35). அண்ணன்கள் மற்றும் தம்பிக்கு இடையே பூர்வீக நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 13.02.2021ம் தேதி காத்தான் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் சேப்ளாபட்டியில் உள்ள அவர்களது தோட்டத்தில் நெல் அறுவடை செய்வது தொடர்பாக தம்பியான கந்தசாமியுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி உள்ளது. இதையடுத்து அண்ணன்கள் இருவரும் சேர்ந்து கந்தசாமியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக குளித்தலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் அண்ணன்கள் காத்தான், சுப்பிரமணி இருவரும் சேர்ந்து தம்பியை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது; இதையடுத்து காத்தான், சுப்பிரமணி இருவரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர்
இவ்வழக்கானது கடந்த 08.04.2021ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கரூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் விசாரணை முடிவுற்று எதிரிகள் காத்தான், சுப்பிரமணி ஆகியோருக்கு தம்பி கந்தசாமியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தலா ரூ.50, ஆயிரம்- அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 4 வருடம் சிறை தண்டனை ஏகபோக காலத்தில் அனுபவிக்க கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி .இளவழகன் தீர்ப்பு வழங்கினார். கொலை குற்றவாளிகள் இருவரையும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வழிக்காவல் மூலம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த விசாரணை அதிகாரி மற்றும் இவ்வழக்கில் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலரையும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா பாராட்டினார்.





















