(Source: ECI/ABP News/ABP Majha)
LEO Movie Release: தியேட்டரில் திருமணம்: லியோ விஜய் ஆசிர்வாதத்துடன் மண வாழ்க்கையில் புகுந்த ஜோடி!
புதுக்கோட்டையில் விஜய் ரசிகர்களான வெங்கடேஷ் மற்றும் சங்கீதா ஆகியோர் லியோ திரைப்படம் வெளியிட்ட திரையரங்கில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துக்கொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து்ளளது. இதற்கு முன்பு வெளியான படத்தின் அப்டேட்கள், பாடல்கள் மற்றும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலை 4 மணி காட்சிகள் கேட்டு பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடினாலும் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. அதேபோல் காலை 7 மணி காட்சி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தபோதும் அதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், இன்று லியோ படம் வழக்கமாக காலை 9 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது.
லியோ கடந்த சில வாரங்களாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. புகைபிடிப்பதை ஊக்குவிப்பது தொடர்பாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விமர்சித்த நிலையில், டிரெய்லரில் விஜய் ஆபாச வார்த்தை பேசியது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதற்கிடையில், படத்தின் ப்ரீ-புக்கிங் மட்டும் சுமார் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஜெயிலரின் முதல் நாள் வசூலை முறியடித்து இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் வீடியோ திரைப்படம் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து நடனமாடி கொண்டாடினர். இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா- மீனா திரையரங்கில் நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து நடனம் ஆடி தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். பின்பு படம் பார்க்க வரும் ரசிகர்களை முழுமையாக சோதனை செய்து அவர்களை திரையரங்கு அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்னதாக திரையரங்கம் வெளியே நடனமாடிய விஜய் ரசிகர்களிடம் திரையரங்கில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் நடனம் ஆடக்கூடாது என கட்டுப்பாடு விதித்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் 2 திரையரங்குகளில் லியோ படம் வெளியானது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் ரசிகரான இருந்து வரும் வெங்கடேஷ் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். குறிப்பாக சங்கீதா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர், வெங்கடேஷ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும், இருவருக்கும் நாளை திருமணம் நடக்க உள்ளது. இவர்களின் நீண்ட நாள் ஆசையாக விஜய் முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும் என்பது தான். அதனை நிறைவேற்றும் வகையில் மாவட்ட தலைவர் பர்வேஸ் இன்று லியோ திரையிடப்படும் திரையரங்கில் ரசிகர்கள் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் ரசிகர்களின் முன்னிலையில் அவர்கள் இருவரையும் வரவழைத்து மாலை மாற்றி கொள்ள செய்ததோடு மோதிரத்தை இருவரும் அணிந்து கொள்ள செய்தார்.
மேலும், நாளை முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இன்று தங்களது நீண்ட நாள் ஆசையான விஜய் முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்ற ஆசை முதல் கட்டமாக மாலை மாற்றி மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.