கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI-ஐ தேர்ந்தெடுப்பதற்கு முன், அது என்ன? அதன் நன்மை என்ன? ஆபத்துகள் என்னென்ன? என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒரு பெரிய விலையுள்ள பொருளை வாங்கும்போது, கிரெடிட் கார்டு மூலம் சமமான மாதாந்திர தவணைகள் (EMI) முறையில் பணம் செலுத்துவது மிகவும் பிரபலமாகிவிட்டது. முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாததால், இந்த முறை பலரையும் ஈர்க்கிறது. ஆனால், கிரெடிட் கார்டு EMI-ஐ தேர்ந்தெடுப்பதற்கு முன், அது என்ன? அதன் நன்மை என்ன? ஆபத்துகள் என்னென்ன? என்பதை புரிந்துகொள்வது, நம்முடைய செலவீனங்களை மிகச்சரியாக நிர்வகிக்க மிகவும் அவசியம்.
கிரெடிட் கார்டு EMI என்பது, நீங்கள் வாங்கிய மொத்த விலையையும் நிலையான மாதாந்திர தொகைகளாகப் பிரித்துச் செலுத்தும் முறையாகும். உதாரணமாக, நீங்கள் ரூ.20,000 விலையுள்ள ஒரு தொலைக்காட்சி பெட்டியை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் EMI-ஐ தேர்வு செய்தால், உங்கள் வங்கி அந்தக் கடைக்கு ரூ.30,000-ஐ உடனடியாக செலுத்திவிடும். ஆனால், அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து, நீங்கள் 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் என தேர்ந்தெடுத்த காலக்கெடுவுக்குள் சம தவணைகளாக (EMI) உங்கள் கிரெடிட் கார்டு பில்லில் செலுத்த வேண்டும். இந்த தவணைத் தொகை மாதந்தோறும் ஒரே மாதிரி இருக்கும் என்பதால், உங்கள் மாதாந்திரச் செலவுகளைத் திட்டமிடுவது எளிதாக இருக்கும். EMI தொகையை வட்டியுடன் சேர்த்து நீங்கள் முழுமையாக செலுத்தி முடிக்கும் வரை, அந்தத் தொகை உங்களின் கிரெடிட் கார்டு வரம்பில் (Credit Limit) இருந்து கழிக்கப்பட்டுவிடும்.
வங்கிகள் இப்போது வாங்கும்போதே அல்லது வங்கியின் செயலி வழியாக EMI-ஆக மாற்றும் வசதியை வழங்குகின்றன. நீங்கள் EMI-ஐ தேர்வு செய்யும் முன் இந்தப் படிகளைப் பின்பற்ற வேண்டும். ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை உள்ள தொகைக்கு மேல் உள்ள கொள்முதல்களை மட்டுமே EMI-ஆக மாற்ற முடியும். 3 மாதங்கள், 6 மாதங்கள் என சிறிய கால அளவையோ அல்லது 12 மாதங்கள், 24 மாதங்கள் என நீண்ட கால அளவையோ உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். வங்கி எந்த அளவுக்கு வட்டி அல்லது செயலாக்க கட்டணம் (Processing Fee) வசூலிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பண்டிகை காலங்களில் வழங்கப்படும் 'வட்டி இல்லா EMI' (No-cost EMI) சலுகைகள் மிகவும் பயனுள்ளவை. EMI தொகையும் வட்டியும் மாதந்தோறும் உங்கள் கிரெடிட் கார்டு பில்லில் சேர்க்கப்பட்டு வரும். உங்கள் மாதாந்திர பட்ஜெட்டைப் பாதிக்காமல், ஒரு பெரிய விலையுள்ள பொருளை வாங்க விரும்பினாலோ அல்லது உங்களுக்கு வட்டி இல்லா EMI சலுகை கிடைத்தாலோ பயன்படுத்தலாம். அதேபோல், நிலையான மாதாந்திரச் செலவுகளை நீங்கள் விரும்பினாலும் பயன்படுத்தலாம்.
வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்தாலோ அல்லது மறைமுகமான கட்டணங்கள் இருந்தாலோ தவிர்க்க வேண்டும். அதேபோல், உங்கள் மாத வருமானத்தில் EMI தொகையை செலுத்துவது கடினம் என்று தெரிந்தால் அல்லது சரியான நேரத்தில் தவணையைச் செலுத்தத் தவறினால் ஏற்படும் சட்ட மற்றும் நிதிச் சிக்கல்கள் பற்றி உங்களுக்கு தெரியாவிட்டாலோ EMI உங்களுக்கு சிறந்ததாக இருக்காது.கிரெடிட் கார்டு EMI என்பது புத்திசாலித்தனமாக பயன்படுத்தப்பட்டால், உங்கள் பணப்புழக்கத்தை பாதிக்காமல், பெரிய பொருட்களை வாங்க உதவும் ஒரு சிறந்த கருவி. எனவே, பெரிய கொள்முதல் செய்யும்போது, ஒரு நிதி ஆலோசகருடன் கலந்தாலோசித்து, அனைத்து விதிமுறைகளையும் தெளிவாக புரிந்துகொண்ட பிறகு EMI-ஐ தேர்வு செய்வது பாதுகாப்பானது.





















