Madhampatty Rangaraj Case: மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு; ஜாய் கிரிசில்டாவிற்கு ஆறுதல்; போலீசாருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான ஜாய் கிரிசில்டாவின் வழக்கில் முக்கிய திருப்பமாக, ரங்கராஜ் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய விசாரணையில் நடந்தது என்ன.? பார்க்கலாம்.
ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை 2-வது திருமணம் செய்து, கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றி விட்டதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் நடந்த விசாரணை
இந்த சூழலில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாய் கிரிசில்டா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சுதா, புகார் மீது காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும், அவருக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வாதிட்டார். அதோடு, புகார் அளித்து 40 நாட்களுக்கு பின்னரே காவல்துறை வழக்கு பதிவு செய்ததாகவும், அந்த வழக்கும் உரிய பிரிவுகளில் பதிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், புகார் மீதான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை என்றும், சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ஜாய் கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், அவரை விசாரணைக்கு அழைப்பதில் சிக்கல் இருந்ததாகவும் அவர் கூறினார்.
காவல்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து, விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதோடு, இந்த வழக்கு தொடர்பாக, தங்களிடம் உள்ள ஆதாரங்களை காவல்துறையிடம் அளிக்க, ஜாய் கிரிசில்டா தரப்பிற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
மாதம்பட்டி ரங்கராஜை காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை என்று ஜாய் கிரிசில்டா தரப்பு கூறும் நிலையில், இதற்குப் பிறகாவது, இந்த வழக்கில் உண்மை என்ன என்பது வெளி வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















