ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவில்லை என்றால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தொழிலாளர் நலத்துறை
அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு கோடை வெப்பத்தை சமாளிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்- தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தகவல்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் தங்களது வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு கூட சற்று யோசித்து செல்கின்றனர். குறிப்பாக நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் ஒரு சில இடங்களில் உயிர் இழப்பும் ஏற்படுகிறது. அதே சமயம் வெப்பநிலை தாக்கத்தால் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அதே சமயம் நீர் ஆதார உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும் பருவநிலை மாற்றத்தால் இன்னும் சில நாட்கள் வெப்பநிலை சில மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வெப்பநிலை அதிகரிப்பால் நோய் பரவல் அதிகரிப்பு
பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வெப்பநிலை அதிகரிப்பால் பொதுமக்கள் உயிர் பயத்துடன் தங்களது, வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு கூட அச்சம் உடன் இருக்கின்றனர். அதே சமயம் உடலில் வெப்பம் அதிகமானால் மஞ்சகாமாலை ஹிட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பல வகையான நோய்கள் தற்போது பரவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். ஆகையால் வெப்பநிலை அதிகரிப்பால் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பாக அதிரடியாக அறிவிப்புகளை அறிவித்துள்ளது. அதாவது அனைத்து நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களுக்கு தற்போதைய கோடைகால வெப்பநிலையை சமாளிக்க தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமினஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தராத நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை
இந்நிலையில், திருச்சி மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் தெரிவித்துள்ளதாவது, சென்னை தொழிலாளர் ஆணையா் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையா் ஜெயபாலன் அறிவுரையின்படியும் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனகளிலுள்ள தொழிலாளர்கள் ஆகியோருக்கு, தற்போது நிலவும் கோடைகால வெப்ப நிலையை சமாளிக்கும் வகையிலான வசதிகள் செய்து கொடுப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய குடிநீர் வசதி, குளியலறை வசதி, கழிப்பறை வசதி, காற்றோட்டமான சூழ்நிலை, சுழற்சி முறையில் ஓய்வு அடிபப்டையிலான வேலை நேரம், இருக்கை வசதி ஆகியவற்றை அனைத்து நிறுவனங்களும், தமிழ்நாடு கடைகள் நிறுவனச்சட்டத்தின் கீழ் செய்து தர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்ட அமலாக்க அலுவலா்களால் தொடா் கண்காணிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும், இந்த அறிவுரையை ஏற்காமல் அலட்சியப் போக்கில் செயல்படும் நிறுவனங்கள் மீது எந்த விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் அதனுடைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.