பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு நாள் இந்த நிலை அனைவருக்கும் திரும்பும் - ஃபெலிக்ஸ் ஜெரால்டு
தனியார் youtube சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா உத்தரவு.
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்
பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக மே 6 ஆம் தேதியன்று சேலத்தைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் அளித்த புகார், மே 8 ஆம் தேதியன்று முசிறியைச் சேர்ந்த காவல்துறை டிஎஸ்பி அளித்த புகார் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தமிழக முன்னேற்றப் படை என்ற கட்சியை நடத்தி வரும் வீரலட்சுமி என்பவர் அளித்த புகாரில் மே 8 ஆம் தேதி சங்கர் மீதும் சங்கரை பேட்டியெடுத்த யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு, 2018ஆம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் ஒருவர், சவுக்கு சங்கர் தன்னைப் பற்றி அவதூறாக எழுதிவருவதாக அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கை அதே நாளில் பதிவுசெய்யப்பட்டது.
மே 10 ஆம் தேதியன்று, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரில் போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து தவறான கருத்துகளை சங்கர் பரப்பிவருவதாக கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாகவும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், அவரைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை, கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு மே 12ஆம் தேதி அளிக்கப்பட்டது
தனியார் யூட்டியூப் சேனல் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். சங்கர் தொடர்பான வழக்கில் தான் கைது செய்யப்படக்கூடும் என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், யூடியூப்களில் பேட்டி எடுப்பவர்கள், பேட்டி அளிப்பவர்களைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். ஆகவே அவர்களைத் தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று கூறி, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது. இதையடுத்து, ஃபெலிக்ஸ் ஜெரால்டைக் கைது செய்யும் முயற்சிகளில் காவல்துறை இறங்கியது. ஃபெலிக்ஸ் ஜெரால்டு, டெல்லி சென்றிருந்த நிலையில், அவரை அங்கு வைத்து திருச்சி மாவட்ட தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், டெல்லியிலிருந்து ரயில் மூலமாக பெலிக்ஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், சென்னையிலிருந்து போலீஸ் வாகனம் மூலமாகத் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, திருச்சி 3வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது பாரதி உட்பட 3 வழக்கறிஞர்கள் தங்களையும் மனுதாரராக இணைக்க வேண்டும் என கூறி வாதங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்டு அறிந்த பின் நீதிபதி, ஜெயப்பிரதா, சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைக் காண வேண்டும் என்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மே 27 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, காவல்துறையினர் பெலிக்ஸை கைது செய்து திருச்சி மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் விக்னேஷ்வரன் தகவல்
திருச்சி செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் விக்னேஷ்வரன் பேசியது.. டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி நீதிமன்றத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்டு அறிந்த நீதிபதி, சவுக்கு சங்கர் வழங்கிய நேர்காணலைப் பார்த்துவிட்டு பின்னர் அவருக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார்.
பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் வழக்குகள் அவர் மேல் பதியப்பட்டாலும், ஒரு வழக்கு மட்டுமே அவருக்குப் பிணை வழங்க முடியாத வகையில் உள்ளது. மற்றவை பிணை வழங்கும் வகையில் உள்ளது. காவல்துறை தனக்கு எந்தவித தொந்தரவும் தரவில்லை என தெரிவித்தார். 167 பிரிவின் படி கைது செய்யப்பட்ட பகுதியில் உள்ள நீதிமன்றம் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும் என உள்ளது. ஆனால், அவர் அரசியல் பின்புலம் இருப்பதால் அவரை கொண்டு செல்லும்போது கூட்டம் திரளும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், சவுக்கு சங்கர் பேசியதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாகப் பெண் காவலர்கள் தங்களது ஆதங்கத்தை நீதிபதியிடம் தெரிவித்தனர் என்று கூறினார்.
வேனில் ஏறும் பொழுது செய்தியாளர்கள் முன் பேசிய ஃபெலிக்ஸ்..
உங்களுக்கும் இதே நிலைமைதான். விரிவாக வெளியில் வந்தவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறேன்.நம்மைப் போன்ற எல்லா பத்திரிகையாளர்களுக்கும் இந்த நிலைமை ஒரு நாள் வரும். பத்திரிக்கையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு நாள் இந்த நிலை அனைவருக்கும் திரும்பும் என்று சொல்லிய பொழுது காவல்துறையினர் இழுத்து வேனிற்குள் தள்ளி ஏற்றினர்