Jallikattu 2024: திருச்சியில் முதல் ஜல்லிக்கட்டு சூரியூரில் வரும் 16ம் தேதி தொடக்கம்..வீரர்கள் உற்சாகம்
திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16ஆம் தேதி சூரியூரில் கோலாலமாக நடைபெற உள்ளது.
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழ்நாட்டில், தமிழரின் பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானதாகும். அந்தவகையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீநற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் சார்பில் பரிசு பொருட்கள் பிரம்மாண்டமாக வழங்கப்படும். இந்தஆண்டு வரும் 16ம் தேதி (தை 2ம்நாள்) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் பேரிக்கார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் விஜி ஆறுமுகம், சூரியூர் அழகர், சாமிநாதன் பிள்ளை, மீனாட்சி சுந்தரம் ஐயர், முருகன், செந்தில் குமார் ஆகியோர் மேற்பார்வை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். 400 மீட்டர் தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு களத்திற்குள் 15 மீட்டர் வரை தேங்காய் நார்கள் கொட்டப்பட உள்ளது. ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு காண வருவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தற்பொழுது ஜல்லிக்கட்டு களத்தில் வாடிவாசல் பகுதி காளைகளை பரிசோதனை செய்யும் பகுதி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. களத்திற்குள் உள்ள இரும்பு தடுப்பு வேலைகளுக்கும் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் பகுதி முழுவதும் இரும்பு தடுப்புகளை கொண்டு பாதுகாப்பாக அமைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால், இப்பகுதி கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க மோதிரம் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்க விழா குழுவினர் செய்துள்ளனர். மேலும், 500 காளைகளும், 300 காளையர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளனர் என ஜல்லிகட்டு குழுவினர் தகவல் தெரிவித்தனர்.