புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு
புதுக்கோட்டையில் ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவர் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகளில் ஒளிரும் விளக்குகள் அமைத்தல், ஊர் பெயர் பதாகைகள் அமைத்தல், சாலையில் வெள்ளைக் கோடு போடுதல் உள்ளிட்ட பணிகளை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவரது பிரதான அலுவலகம் புதுக்கோட்டையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 2 கார்களில் திடீரென வந்து இறங்கினர். மேலும் நுழைவுவாயில் கதவை மூடி அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் அலுவலகத்தில் இருந்தவர்களையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அலுவலகத்திற்குள் அதிகாரிகள் புகுந்து ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். அலுவலகத்தில் கணக்குகள் சரிபார்க்கும் பிரிவுக்கு சென்றும் சோதனையிட்டனர். அங்கிருந்த ஊழியா்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த சோதனையானது பாண்டிதுரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும் இந்த சோதனையின்போதே அவரது அலுவலகத்தின் அருகே உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமாக புதுக்கோட்டை மச்சுவாடி அருகே சிட்கோ தொழிற்சாலையில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலை, சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை ஆகிய இடங்களிலும், கீழ 2-ம் வீதியில் உள்ள கட்டிட அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரின் சோதனை காலை முதல் மாலை வரை நீடித்தது. இதனை தொடர்ந்து இதேபோல் கோவை பீளமேட்டில் உள்ள பாண்டிதுரையின் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனை காலை தொடங்கி இரவுவரை நீடித்தது. மேற்கண்ட சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. பாண்டிதுரையின் தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றிய போது அவர் இறந்த நிலையில் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி பாண்டிதுரைக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து சிறிது ஆண்டுகள் பணியாற்றிய பின் அதில் இருந்து விலகி, ஒப்பந்த பணிகளை எடுத்து மேற்கொள்ள தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பாண்டிதுரை நெருக்கமாக இருந்ததாகவும், எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த கால கட்டத்திலேயே அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. பாண்டிதுரையின் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையால் புதுக்கோட்டை, கோவையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்