புதுக்கோட்டை மாவட்டத்தில் தம்பியை கொன்ற அண்ணன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தம்பியை கொன்ற அண்ணன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே கூகனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 45). விவசாயியான இவரது அண்ணன் சுப்பிரமணியன் (வயது 59). இவருக்கு குமார், விக்னேஸ்வரன் (31) என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் குமாருக்கு தேவி என்பவருடன் திருமணம் நடந்தது. அதன்பின் குமார் வெளிநாட்டிற்கு சென்றார். இந்த நிலையில் குமாரின் தம்பியான விக்னேஷ்வரனுக்கும், அண்ணி தேவிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இதனால் தேவியை அழைத்துக்கொண்டு விக்னேஷ்வரன் திருப்பூர் சென்று குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை குமார் கண்டித்துள்ளார். குமாரின் மனைவி தேவி, சித்தப்பா பாலையாவின் மனைவியின் தங்கை ஆவார். இதனால் தனது சொந்த சித்தப்பாவான பாலையாவிடம் குமார் முறையிட்டு கண்டிக்க கூறினார். அவரும் தேவியையும், விக்னேஷ்வரனையும் கண்டித்தார். இந்த நிலையில் 18-9-2020 அன்று கூகனூரில் சுப்பிரமணியன் வீட்டில் அவரது மகன் விக்னேஷ்வரன், தேவி உள்பட உறவினர்கள் இருந்தனர். அப்போது பாலையாவும், அவரது மகனுமான சக்திவேல் ஆகியோர் சென்று விக்னேஷ்வரனிடம் தட்டிக்கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பாலையாவை அவரது அண்ணன் சுப்பிரமணியனும், சுப்பிரமணியனின் மகன் விக்னேஷ்வரன், உறவினர் வீரமணி (34) ஆகியோரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியும், ஈட்டியால் குத்தியும், இரும்பு கம்பியால் தாக்கியும் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் சுப்பிரமணியன், விக்னேஷ்வரன், வீரமணி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு வழங்கினார். இதில் சுப்பிரமணியன், அவரது மகன் விக்னேஷ்வரன், உறவினர் வீரமணி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் புலன் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், கோர்ட்டு பணி ஏட்டு நரசிம்மன் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்