’’இந்த ஆண்டு எனது பிறந்தநாளை கொண்டாட எனக்கு விருப்பம் இல்லை’’ - அமைச்சர் நேரு
’’மக்களுக்கான பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன் ஆகையால் எனது பிறந்த நாள் அன்று நான் ஊரில் இருக்கமாட்டேன்; யாரும் வாழ்த்து கூற வரவேண்டாம்’’
திருச்சி திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கட்சி தொண்டர்கள் கொண்டாடுவது வழக்கம். திருச்சி தில்லை நகரில் உள்ள இவரது அலுவலகத்தில் பிறந்தநாள் விருந்து நடைபெறுவது வழக்கம். தற்போது அவர் திமுகவில் முதன்மைச் செயலாளராக இருப்பதால், திருச்சி மாவட்டத்தை கடந்து மாநிலம் தழுவிய அளவில் அவரை காண ஏராளமான நிர்வாகிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து கூற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள் திருச்சிக்கு வர ஆயத்தமாகி இருந்தனர். இந்நிலையில் நான் ஊரில் இருக்கமாட்டேன் என்னை பார்க்க யாரும் வரவேண்டாம், எனஅமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கனமழையால் தமிழகத்தின் பல இடங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகிறது ஆகையால் தடுப்பு நடைவடிக்கை பணியில் ஈடுப்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திமுக முதன்மைச்செயலாளர், அமைச்சர் கே.என்.நேருவுக்கு இன்று நவம்பர் 9 ஆம் தேதியன்று 70 ஆவது பிறந்தநாள். வயது 70-ஐ தொட்டாலும் அவரிடம் உள்ள சுறுசுறுப்பும், வேகமும், 50 வயதுடையவரை போல் தான் காட்டும் என கட்சி நிவாகிகள் கூறுகிறார்கள். குறிப்பாக ஆண்டுதோறும் தனது பிறந்தநாளன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கையோடுடன், விமானம் பிடித்து திருச்சிக்கு சென்று அங்கு தனது ஆதரவாளர்களின் வாழ்த்து மழையில் நனைவது கே.என்.நேருவின் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கனமழை காரணமாக ஆய்வு பணியில் ஈடுபட்டு வருவதால் என்னால் திருச்சிக்கு வர இயலாத சூழ்நிலையில் உள்ளேன், ஆகையால் என்னை சந்திக்க யாரும் வர வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் சீட் எதிர்பார்க்கும் பலரும் நேருவை பிடித்தால் அவர் சிபாரிசில் ஸ்டாலினிடம் சீட் பெற்றுவிடலாம் எனக் கருதி வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட இந்தாண்டு நேருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல கூட்டம் அதிகம் அளவில் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில், மழைவெள்ள பாதிப்பை காரணம் கூறி இந்தாண்டு தாம் பிறந்தநாள் கொண்டாடவிரும்பவில்லை எனக் கூறியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
சென்னையில் தொடர் கனமழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளகாடாக இருப்பதால் தடுப்பு நடவடிக்கை, சீரமைக்கும் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்னை மாநகரம் முழுவதும் நிவாரண பணிகளை ஆய்வு செய்து வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறார். மேலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மக்களுக்கான பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன் ஆகையால் எனது பிறந்த நாள் அன்று நான் ஊரில் இருக்கமாட்டேன் என்றும் இதனால் ஆதரவாளர்கள் யாரும் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூற வர வேண்டாம் எனவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கேட்டு கொண்டுள்ளார். மேலும் இந்தாண்டு தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.