திருச்சியில் எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜா மீண்டும் கைது - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
நீதிமன்ற நிபந்தனையை மீறியதாக திருச்சியில் எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜா பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாநகர், மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் எல்பின் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும், நிலம் தருவோம் என்றும் பல்வேறு வாக்குறுதிகளை கூறி, பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று ஏமாற்றிவிட்டனர். இதையடுத்து எல்பின் இ.காம் பிரைவேட் லிமிடெட், ஸ்பரோ குளோபல் டிரேட் திருச்சி, ஆர்.எம் வெல்த் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட், கோவை மற்றும் இன்பை கேலக்ஸி மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராக தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், கோவை மற்றும் சென்னை ஆகிய 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வழக்குகள் கடந்த பல்வேறு காலகட்டங்களில் பதியப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை விசாரிக்க கோர்ட்டு வழிகாட்டுதலின்பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. மேற்கூறிய நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தப்படாத, முறைப்படுத்தப்படாத வைப்புத்திட்டங்கள் மூலமாக பொதுமக்களை ஏமாற்றி வந்ததால் இந்த வழக்கில் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்த எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜா என்கிற அழகர்சாமியை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.
மேலும், இவர் ஏற்கனவே முந்தைய வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் கோர்ட்டு நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் அவர் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றி பெறப்பட்ட பணத்தில் வாங்கிய அசையா சொத்துக்கள் பற்றியும், இந்த சொத்துக்களை வாங்க முன்பணம் யார், யாரிடம் கொடுத்தார் என்ற விவரம் பற்றியும் கூறியுள்ளதாகவும், மேற்கண்ட சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜா என்கிற அழகர்சாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் இவ்வாறான நிறுவனங்கள் மீது வைப்புநிதி திட்டங்களில் முதலீடு செய்யும்போது, அவர்களின் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அறிந்து செயல்படுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் வேறு ஏதேனும் இது மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மூலம் அவர்களது நடவடிக்கை தனித்தனியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்