Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
விசிக-வில் கருத்து மோதல்களை ஏற்படுத்தியதைபோல், இங்கு சேர்ந்த பின்னர் த.வெ.க-விலும் உட்கட்சி பூசலை ஆதவ் அர்ஜூனா உருவாக்கிவிடுவாரோ என விஜய் நினைப்பதாகவும், கட்சியில் இணைக்க தயக்கம் காட்டுவதாகவும் தகவல்
திமுக குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்த ஆதவ் அர்ஜூனாவை தயவு தாட்சண்யம் இன்றி கட்சியை விட்டு 6 மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அடுத்த நாளே அறிக்கை விட்ட ஆதவ் அர்ஜூனா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், உங்களை அழைத்து வந்து புத்தக வெளியீட்டு விழா நடத்தியதால்தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொள்ளும்படியும் அக்கட்சி தலைவர் விஜயை, ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து நச்சரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 நீங்கதான் CM – ஆசைக் காட்டும் ஆதவ்
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முக்கியமான கட்சிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் கூட்டணிக்கு கொண்டுவருகிறேன் என்றும் உங்களுக்கு வியூக வகுப்பாளராக ஊதியமில்லாமல் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் விஜய்க்கு ஆதவ் அர்ஜூனா ஆசை வார்த்தைகள் காட்டி வருகிறார் என்றும் நான் சொல்வதை கேட்டு நடந்தால், 2026ல் நீங்கள்தான் CM என்று சொல்லி விஜயை கனவில் நடக்க வைக்கிறார் என்றும் ஆதங்கப்படுகின்றனர் விஜயின் ஆதரவாளர்கள்.
பட்டித் தொட்டி என கிளை கழகம் வரை பரந்து விரிந்து கட்டமைப்போடு பலமாக இருக்கும் திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளை தாண்டி ஒரு சாதாரண வியூக வகுப்பாளரால் எப்படி புதிதாக தொடங்கிய கட்சியை முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க வைக்க முடியும்? என்ற கேள்வியும் விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆதவை இணைக்க புஸ்ஸி ஆனந்த் எதிர்ப்பு ?
இந்நிலையில், ஆதவ் அர்ஜூனாவை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்க அந்த கட்சியின் பொதுச்செயலாளரும் விஜயின் நம்பிக்கையை பெற்றவருமான புஸ்ஸி ஆனந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் ஆதவ் அர்ஜூனா கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டால் தன்னுடைய செல்வாக்கு சரிந்துவிடும் என்பதால் அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள கூடாது என்று புஸ்ஸி ஆனந்த் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் கட்சியில் நம்பர் 2வா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்து நம்பர் 2ஆக முயற்சித்த ஆதவ் அர்ஜூனாவை அந்த கட்சியின் நிர்வாகிகள் கண்டறிந்து, அவரது செயல்பாடுகள் குறித்து திருமாவளவனுக்கு விரிவான ரிப்போர்ட் அளித்து, அவரை கட்சியில் இருந்து நீக்க காரணமாக இருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றால் அங்கு தான் தான் நம்பர் 2ஆக இருப்பேன் என்று தன்னுடைய அணியினரிடம் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளதாகவும், தன்னை விட அரசியல் களம் அறிந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் யாரும் இல்லை என்று அவர் பேசிதாகவும் வாய்ஸ் ஆஃப் காமன் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
முதல்வர் இல்லையென்றால் துணை முதல்வர் – புது முயற்சியில் ஆதவ்
அதே நேரத்தில், புதிய கட்சியை நம்பி பெரிய கட்சிகள் யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்ற எதார்த்தத்தையும் உணர்ந்துள்ள ஆதவ் அர்ஜூனா, விஜயிடம் நைசாக பேசி, அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணி வைக்க வைத்து, துணை முதல்வர் பொறுப்பு என்ற ஒப்பந்தத்தையும் போட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்துள்ளதாகவும். இதனை, கட்சியில் இணைந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டால் தேர்தல் நேரத்தில் பொருளாதார ரீதியாக தன்னுடைய மாமனார் லாட்டரி மார்டின் மூலம் உதவிகள் செய்வதாகவும் ஆதவ் அர்ஜூனா விஜயிடம் கூறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தயக்கம் காட்டுகிறாரா விஜய் ?
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கருத்து மோதல்களை ஏற்படுத்தி பிரச்னைக்கு வித்திட்டது போல, கட்சியில் சேர்ந்த பின்னர் இன்னும் தேர்தலையே சந்திக்காத த.வெ.க-விலும் ஏதேனும் உட்கட்சி பூசலை ஆதவ் அர்ஜூனா உருவாக்கிவிடுவாரோ என எண்ணி, விஜய் இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல், தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது