(Source: ECI/ABP News/ABP Majha)
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் - எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி, முன்னாள் எம்எல்ஏ-வும், வடக்கு மாவட்ட அவைத் தலைவருமான பிரின்ஸ் எம். தங்கவேல் கடந்த 17 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவரது திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முசிறியில் உள்ள பிரின்ஸ் தங்கவேல் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது குடும்பத்திற்கு எடப்பாடி கே. பழனிசாமி ஆறுதல் கூறினார்.
இதில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, தெற்கு மாவட்ட செயலார் ப.குமார், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, MR விஜயபாஸ்கர், சின்னசாமி, சிவபதி, வளர்மதி, பூனாட்சி, அண்ணாவி, சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், பொறியாளர் இப்ராம்ஷா, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மேலும் சென்னை, தூத்துக்குடி, கனமழை குறித்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தும், முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும். முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் மனித உயிர்கள், கால்நடைகளை இழந்துள்ளோம். குறிப்பாக அதிமுக செய்திகளை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன.
தமிழக மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அதனை கருத்தில் கொள்ளாமல் திமுக இந்தியா கூட்டணியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்று விட்டார். ஏற்கனவே உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்கனவே ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் எந்த பயனும் ஏற்படவில்லை. ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதன் மூலம் முதலீட்டாளர்கள் முதலீடு ஈர்க்கப்பட்டது. தற்போது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினால் பயன் ஒன்றும் கிடைக்காது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. திருச்சி முக்கொம்பு மழை வெள்ளம் காரணமாக கொள்ளிடம் பாலம் இடிந்தது. எனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரையில் அதிகாரப்பூர்வமாக பாலம் திறப்பு விழா நடைபெறவில்லை. புதிய பாலத்தை திறந்தால் உங்களுக்கு (ஸ்டாலினுக்கு) ஆபத்து நேரும் என ஜோசியர்கள் எச்சரித்து இருப்பார்கள். அதன் காரணமாகவே பாலம் திறக்கப்படவில்லை என தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசினார்.
மேலும், திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாபேட்டை ஒன்றியம் அட்டாளப்பட்டி கிராமத்தில் மொட்டையன் - மாரியாயி தம்பதியின் மகனாகப் பிறந்தவர் பிரின்ஸ் எம். தங்கவேல் இவரது வயது 62 . இவர், தையல் தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். பிரின்ஸ் டைலரிங் என்ற கடையின் காரணமாக பிரின்ஸ் எம் தங்கவேல் என அழைக்கப்பட்டார். 1989 ஆம் வருடம் அதிமுக ஜெயலலிதா அணியில் முசிறி தொகுதி வேட்பாளராக சௌந்தரராஜன் அறிவிக்கப்பட்டார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்யாத காரணத்தால் பிரின்ஸ் எம். தங்கவேல் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். பின்னர் 1991 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட அதிமுகவில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். தொடர்ந்து ஏழு வருடம் முசிறி தொகுதி எம்எல்ஏவாக பணியாற்றியுள்ளார். இவருக்கு சந்திரா எனும் மனைவியையும், சக்கரவர்த்தி எனும் மகனும் சுபாஷினி எனும் மகளும் உள்ளனர். திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.