Trichy: முதல்வர் வருகையால் திருச்சி - திண்டுக்கல் சாலையை அவசர அவசரமாக புதுப்பிக்கும் அதிகாரிகள்
திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாளை மறுநாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
தமிழ்நாடு முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கல்லிக்குடி அருகே அரிஸ்டோ ரவுண்டானா முதல் சோழன் நகர் வரை ஏற்கனவே உள்ள இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியை மாநில நெடுஞ்சாலைகள் மேற்கொண்டுள்ள நிலையில், திருச்சி மாநகராட்சி கருமண்டபத்தில் உள்ள பல்வேறு குடியிருப்பு காலனிகளிலும் பாதாள சாக்கடை பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் சாலை விரிவாக்க பணிக்கு ₹74.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின்படி, தற்போதுள்ள சாலையின் அகலம் 14 மீட்டரிலிருந்து 18 மீட்டராக அதிகரிக்கப்படும். சென்டர் மீடியனுடன் அதிக வாகனங்கள் செல்ல இருபுறமும் 9 மீட்டர்கள் அமைக்கும் பணிகள் மிக மிக மந்தமாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட சாலைப் பணி ஆகும். சோழன் நகர் முதல் பிறட்டியூர் வரையிலான சாலை விரிவாக்கப் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முடித்துள்ள நிலையில், கருமண்டபம் பணி இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதே பகுதியில், பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும் பணியை எளிதாக்கும் வகையில், அதிகாரிகள் சாலையின் ஒரு ஓரத்தை அடைத்ததால், மறுபுறம் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான வாகனங்களைக் கையாள இது மிகவும் போதுமானதாக இல்லை. இதனை தொடர்ந்து பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக குடியிருப்புவாசிகள் மற்றும் சாலைகளை வழக்கமாக பயன்படுத்துபவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வாகனம் ஓட்டுவது ஒரு பயங்கரமான அனுபவம், சாலையின் குறுகலான இடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது.இதனால், அதிகளவில் குண்டும் குழியுமாக உள்ளது. 7 மாதங்களுக்கும் மேலாக நாங்கள் கடினமான நேரத்தை எதிர்கொள்கிறோம் என பொதுமக்கள் கூறினர். குறிப்பாக சாஸ்திரி ரோட்டில் யுஜிடி பணிகள் விரைந்து முடிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய கருமண்டபம் பகுதிவாசிகள், திருச்சி-திண்டுக்கல் ரோட்டிலும் இதே அணுகுமுறையை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தனர். வாகன ஓட்டிகளின் துன்பங்களை குறைக்கும் வகையில் அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து இருந்ததனர். ஆனால் தொடர்ந்து பணிகள் மந்தமாக தான் நடைபெற்று வந்தது. இதனால் திருச்சி - திண்டுக்கல் சாலையில் பல விபத்துகள் நடந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள வேளாண்மை கண்காட்சி, உல்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் வரவுள்ளார். இதனால் திருச்சி - திண்டுக்கல் சாலை மட்டும் கடந்த 3 நாட்களாக இரவு,பகலாக சாலைகளை அவசர அவசர மாக புதுப்பிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது, "கடந்த 9 மாதங்களாக திருச்சி - திண்டுக்கல் சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் மந்தமாக நடந்ததால், இப்பகுதியில் வாகன ஓட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது, அதுமட்டும் அல்லாமல் விபத்துகள் அடிக்கடி நடந்தது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து செல்ல கூடிய சாலையாக உள்ளதால் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் இருந்து பொதுமக்களின் கோரிக்கைகளை அலட்சியம் படுத்தும் அதிகாரிகள், முதல்வர் வருகிறார் என்றவுடன் பணிகளை முடிக்கிறார்கள். மேலும் முதல்வர், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தெருகளுக்கும் சென்றால், அனைத்து பணிகளும் 3 நாட்களில் உடனடியாக மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள் முடித்துவிடுவார்கள்” என தெரிவித்தனர். குறிப்பாக அனைத்து பணிகளையும் முழுமையாக முடிக்காமல் புதுப்பிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள் என குற்றம்சாட்டினர்.