திருச்சி மாவட்டத்தில் ரவுடீசத்திற்கு இனி வேலை இல்லை - டி.ஐ.ஜி பகலவன் அதிரடி பேட்டி
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தாதாக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி டி.ஐ.ஜி பகலவன் பேட்டி
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மே 19ஆம் தேதி ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அவரது வீட்டில் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேர் கலந்து கொண்டனர். அந்த ஒன்பது பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ஜெகன் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் காயமடைந்தார். மேலும் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக போலீசார் ஜெகனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜெகன் உயிரிழந்தார். இது குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருச்சி டிஐஜி பகலவன் பேசியதாவது:
திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் வினோத்தை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மற்றும் டி ஐ ஜி பகலவன் நேரில் பார்வையிட்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர். திருச்சி ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பொறுத்தவரை, அவரை தேடி சென்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். கை துப்பாக்கி, மற்றும் அருவாள் உள்ளிட்ட ஆயுத வைத்து தாக்க முற்பட்டார். இதில் காவல் உதவி ஆய்வாளர் வினோத் காயமடைந்துள்ளார். காயமடைந்துள்ள உதவி ஆய்வாளர் நலமுடன் உள்ளார். திருச்சி மாவட்டத்தில் ரவுடிசத்திற்கு இடம் கிடையாது. இது போன்ற எண்ணம் உடையவர்களை ஒருபோதும் காவல்துறை அனுமதிக்காது. நடவடிக்கை கடுமையாக இருக்கும். கடந்த மூன்று, நான்கு நாட்களாக ரவுடிகளை ஸ்பெஷல் பிரான்ச் போலீசார் கண்காணித்து வந்தனர். அந்த வகையில் சனமங்கலம் பாரஸ்ட் ஏரியாவில் துப்பாக்கியுடன் பணம் பறிப்பு, உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அங்கு பன்றி மேய்க்கும் தொழிலாளர்களிடமிருந்து கிடைத்த தகவல் கிடைத்தது.
மேலும், அப்பகுதியில் சமூக விரோதிகள் அராஜகம் செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொழுது, ஜெகன் என்ற இந்த நபர் அங்கு இருந்தார். தேடப்பட்ட குற்றவாளி என்பதால் அவரை பிடிக்க முற்பட்டனர். அப்பொழுது துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டு, அருவா உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்க முற்பட்டார் இதனால் அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஜெகன் மீது நான்கு கொலை வழக்கு 6 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 50 வழக்கில் ஈடுபட்டுள்ளார். இதில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளது.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தாதாக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் ரவுடீசத்திற்கு வேலை இல்லை. இவ்வாறு கூறினார்.