வீடற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தம் திட்டம் - திருச்சியில் கணக்கெடுப்பு தீவிரம்
திருச்சி நகர்ப்பகுதிகளில் வசிக்கும் வீடு அற்ற சுமார் 1,500 மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை துவக்கி உள்ளது மாநகராட்சி நிர்வாகம்
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டாலும், மக்களின் நலனை கருதி கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தும் இலக்கை நோக்கி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். இதுவரை திருச்சி மாவட்டத்தில் 23,33,196 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் முதல் தவனை தடுப்புசி 15,68,070 பேர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 7,65,126 பேர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தோற்று குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அலட்சியப் போக்கில் பல்வேறு இடங்களில் இயல்பாக முகக் கவசங்கள் அணியாமலும், கூட்டம் கூட்டமாகவும் நடமாடுவது பார்க்க முடிகிறது. இதனால் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அனைவரும் அரசு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பத்தாம் கட்டமாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறினர்.
திருச்சி மாநகர் பகுதிகளில் கொரோனா ஹாட்ஸ்பாட் குறித்த ஆய்வை நடத்தி உள்ள மாநகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதிகளில் வசிக்கும் வீடு அற்ற மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை துவக்கி உள்ளது. தோராயமாக 1,500 பேர் வீடு அற்ற மக்களாக அடையாளம் காணப்பட்டு உள்ள நிலையில், இவர்களுக்கு, டிசம்பர் முதல் வாரம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக வீடு அற்றவர்களில், ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் மற்றும் தனிப்பட்ட அடையாள ஆவணம் கொண்டவர்களுக்கு மட்டுமே, தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திருச்சி பகுதியில் கொரோனா ஹாட்ஸ்பாட் குறித்த ஆய்வை, மாநகராட்சி நிர்வாகம், தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உதவியின் மூலம், சில வாரங்களுக்கு முன் நடத்தியது. இந்த ஆய்வின் மூலம், வீடு அற்ற மக்களுக்கு, தடுப்பூசி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது தெரியவந்தது. இவர்களில் பெரும்பாலானோர் 40 மற்றும் அந்த வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
நகர்ப்புற தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ. முகமது ஹக்கீம் கூறியதாவது, தற்போதைய நிலையில் வீடற்ற 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவர்களிடம் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் மற்றும் அடையாள அட்டைகள் இருந்தன. இவர்கள், தங்களது இரண்டு தவணை தடுப்பூசியையும் விரைவில் செலுத்திக் கொள்ளவும், அவர்களது விருப்பப்படி, இடம் மாற்றி கொள்வதற்கு ஏதுவாக, அவர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுவதாக ஹக்கீம் குறிப்பிட்டு உள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட வீடற்ற மக்கள், வேறு பகுதிகளுக்கும் இடம் பெயரும்போது, அங்குள்ள அதிகாரிகளிடம் ஆதாரத்தை காட்ட ஒப்புகை ரசீதும் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்து உள்ளார். குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அரசு கூறிய வழிகாட்டு விதிமுறைகளை முறையாக அனைவரும் பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.