ஓடும் ரயிலில் ஏற முயன்று சிக்கிய நபர்! துரிதமாக செயல்பட்டு மீட்ட ரயில்வே போலீஸ் - திருச்சியில் பரபரப்பு
திருச்சி ரயில்வே ஜங்ஷனில், பல்லவன் விரைவு ரயிலில் சிக்கிய ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி மீட்பு - ரயில்வே போலீசார் விசாரணை..
ரயில் பயணம் என்பது மக்களின் வாழ்க்கையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆகையால் ரயில் சேவைகளை மேம்படுத்துவதில் ஒன்றிய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
மேலும் ரயில் பயணங்களை மக்கள் நாளுக்கு நாள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால் பல்வேறு இடங்களில் கூடுதல் வகையில் தேவை இயக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் ரயில் நிலையங்களில் விபத்துக்கள் அவ்வப்போது நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. ஆகையால் ரயில் நிலையங்களில் இருக்கக்கூடிய பயணிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஒலிபெருக்கி மூலம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ரயில்வே விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக ரயில் தண்டவாளங்களை கடக்க கூடாது ஓடும் ரயிலில் இருந்து இறங்கவோ, ஏறவோ கூடாது இந்த விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது.
ஆகையால் விபத்துகளை தடுப்பதற்காக ரயில்வே போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரயில்வே விதிமுறைகளை மீறுவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி கருமண்டபம், விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் ரயில்வே துறையில் ஓய்வு அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நிற்பதற்கு முன்பாகவே ஏற முயன்றுள்ளார் என கூறப்படுகிறது.
இதனால் அவர் தவறி விழுந்து நடைமேடைக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பயணிகள் அவரை உடனடியாக மீட்டனர். பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக ஜெயச்சந்திரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் காலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில்..
ரயில் நிலையங்களில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக ரயில்வே விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து ஒளி பெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் ரயில் விபத்துகளில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், ரயில்வே விதிமுறைகள் குறித்தும் தெளிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறோம்.
ஆனால் சில சமயங்களில் பொதுமக்கள் விதிமுறைகளை மீறுவதால் இது போன்ற எதிர்பாராத விபத்துக்கள் நடைபெறுகிறது. ஆகையால் பொதுமக்கள் ரயில்வே விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.