திருச்சியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் அதிரடி கைது
திருச்சியில் வீட்டுமனை வரிவிதிப்புக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடையே லஞ்சம் வாங்குவதும், அதேபோல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம். இத்தகைய தவறான செயல்களில் ஈடுபடுவது மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருச்சி மாவட்டத்தில் இயங்கக்கூடிய அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடையே லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதே போல் பெறப்படும் புகார் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் கதிர்வேல் (60). தொழிலதிபர். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி கதிர்வேல் சுமார் 15 நாட்களுக்கு முன்பு துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனிடம் தனது விண்ணப்பத்தை கொடுத்துள்ளார்.
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட சௌந்தரபாண்டியன் 15 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் கதிர்வேல் 29.7.2024 அன்று துவாக்குடி நகராட்சிக்கு சென்று பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார்.
திருச்சியில் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
இந்நிலையில் பில் கலெக்டர் சௌந்தரபாண்டியன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உங்களது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்து தர முடியும் என்றும், காலி மனைக்கான வரியை தனியாக கட்டிவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் நேற்று துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் சௌந்தரபாண்டியன் (35) கதிர்வேலுவிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் அது தொடர்பாக துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியது..
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்யவே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. ஆகையால் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால் உடனடியாக தயங்காமல் லஞ்ச ஒழிப்புத்துறையினரை அணுகி புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
அரசுத் துறையில் பணியாற்றும் யாராக இருந்தாலும் லஞ்சம் பெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.