பக்ரீத் பண்டிகை: திருச்சியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய மக்கள்
இஸ்லாமியர்களின் தியாகப் திருநாளான பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருச்சி சையது முர்துசா பள்ளி வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈத்-உல்-அதா என்று அழைக்கப்படும் பக்ரீத் ஈகைத் திருநாள் ஆகும். தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் கொண்டாட்டம், இறைதூதரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்படும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ் மாதம் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்கள், ஆண்டில் இரண்டு பெருநாள்கள், அதாவது இரண்டு முக்கியமான பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். முதலாவது ரம்ஜான் திருநாள், இரண்டாவது பக்ரீத் என்று கூறப்படும் ஈகைத் திருநாள் ஆகும். ஈகைத் திருநாள் அன்று அனைவரையும் நேசிக்க வேண்டும், இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், தியாகம் செய்ய வேண்டும் என்பதை முன்னிறுத்தபடுகிறது. ஆகையால் இஸ்லாமிய மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்வார்கள்.
பக்ரீத், தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் காரணம்...
இப்ராஹிம் என்றொரு இறைதூதர், தனது மகன் இஸ்மாயிலை அல்லாஹ்வுக்கு தியாகம் செய்ததன் நினைவாக இந்த நாள் தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
தன்னுடைய மகனை இறைவனுக்கு பலியிடுவது போல கனவு கண்ட இப்ராஹீம் உடனடியாக அதை நிறைவேற்ற செயல்பட்டார். அதைத் தடுக்க பலரும் முயற்சித்தும், இறைவின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்று, இப்ராஹீம் தன்னுடைய மகனை பலி கொடுக்க முன்வந்தார்.
மகனை பலி கொடுக்கும் நேரத்தில், அந்த இடத்தில் இப்ராஹீம் மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை வைத்தார். மேலும், இப்ராஹிமின் தியாகத்தை கொண்டாடும் விதமாக, அந்த நாள் ஈகைத் திருநாள் என்று கொண்டாடப்படும், அன்று கால்நடைகளை பலியிட்டு ஏழை எளியவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற இறைவன் கட்டளையை ஏற்று, அன்று முதல் இஸ்லாமியர்களால் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையின் முக்கிய அம்சம்..
புனித ஹஜ் யாத்திரை முடியும் நாளை, பக்ரீத் பண்டிகை என்றும், ஹஜ் பெருநாள் என்றும் கொண்டாடுகின்றனர். மசூதிகளில், திடல், மைதானம் போன்ற திறந்த வெளியில் சிறப்பு தொழுகை நடைபெறும். ஒட்டகம், ஆடுகளை பலியிட்டு, குர்பானி கொடுப்பது வழக்கம்.
மேலும் பக்ரீத் பண்டிகை தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது. இஸ்லாமியர்கள், அவரவர் வசதிக்கு ஏற்ப, கால்நடைகளை வளர்த்து, பலியிட்டு இறைச்சியை ஏழை எளியவர்களுக்கு வழங்குகின்றனர். பலியிடப்படும் இறைச்சி மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும்.
ஒரு பகுதி ஏழை எளியவர்களுக்கும், இரண்டாவது பகுதி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும், மூன்றாவது பகுதி தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் தியாகப் திருநாளான பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருச்சி சையது முர்துசா பள்ளி வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் திருச்சியில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
சிறப்பு தொழுகை முடிந்தவுடன் அனைவரும் கட்டிதழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற தொழுகையில் நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ,மக்களிடையே எந்த பாகுபாடும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என தொழுகையில் ஈடுபட்டதாக இஸ்லாமிய பெருமக்கள் தெரிவித்தனர்.